×

கும்பாபிஷேக செலவை திருப்பித்தராததால் கோயிலில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்: பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு

 

பள்ளிப்பட்டு: கும்பாபிஷேகத்தில் கிராம மக்கள் செலவழித்த பணத்தை திருப்பிக்கேட்டு பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிப்பட்டு அருகே பெருமாநல்லூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஓசூர் அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்களது நேர்த்திடன் செலுத்தி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். குறிப்பாக ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் இக்கோயிலுக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் கிராம மக்கள் சார்பில் ரூ.13 லட்சம் செலவு செய்ததாகவும் அந்த தொகை இந்து அறநிலையத்துறை வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நிரம்பி விட்டதால் கோயில் ஆய்வாளர் உஷா தலைமையில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட சென்றனர். அப்போது கும்பாபிஷேகத்தில் கிராம மக்கள் சார்பாக செய்யப்பட்ட செலவுத் தொகையை தங்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்றும், அதுவரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு அனுமதிக்கமாட்டோம் என்று கிராமமக்கள் காணிக்கை எண்ணும் பணியை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் பள்ளிப்பட்டு உதவி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் போலீசார் பாதுகாப்புடன் நேற்று ஆலய உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட கோயில் ஆய்வர் உஷா தலைமையில் 20 பணியாளர்கள் வந்திருந்தனர். உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கு மேற்பட்ட பெண்கள் கோயிலுக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, காணிக்கை எண்ணும் பணி தற்காலிமாக நிறுத்தி வைப்பதாகவும் இணை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி கிராம மக்கள் கோரிக்கை தொடர்பாக சுமூகமான முடிவு எட்டப்படும் என்று உறுதி கூறியதை ஏற்று சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தையில் பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர் சந்திரன், கோயில் தர்மகர்த்தா ஓசூர் ரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கும்பாபிஷேக செலவை திருப்பித்தராததால் கோயிலில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்: பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kumbabishekam ,Pallipattu ,Pallipatu ,Kumbabhishekam ,Perumanallur ,
× RELATED பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில்...