×

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாயில் குடிநீர் கலந்து வீணாவதை தடுக்க வலியுறுத்தல்

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டையில் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய் இணைப்பில் இருந்து திறந்து விடப்படும் குடிநீர், அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் வீணாக கலந்து வருகிறது. இவற்றை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில், சொரக்காய்பேட்டையில் கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மின்மோட்டார் மற்றும் பைப்லைன் மூலமாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எனினும், வீடுகளில் உள்ள குழாய் இணைப்புகளில் குடிநீரை பிடித்துவிட்டு, அப்படியே குழாய்களை திறந்த நிலையில் வைத்துவிடுகின்றனர். இதனால் அதிலிருந்து வெளியேறும் அதிகளவிலான குடிநீர், அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் வீணாக கலந்து வருகிறது. மேலும் பொதுமக்களில் சிலர் முறைகேடாக மெயின் பைப்லைனில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுத்து பயன்படுத்துவதும், ஒருசிலர் குடிநீர் குழாய்களில் இருந்து சாலையிலேயே துணி துவைப்பது உள்பட பல்வேறு பணிகளால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரை வீணாக்கி வருவது அதிகரித்துள்ளது.

தற்போது கோடை வெயில் தீவிரமாகும் நிலையில், பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனினும், பொதட்டூர்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த வேண்டிய நீரை வீணாக கழிவுநீர் கால்வாயில் கலப்பதை உடனடியாக தடுக்க வேண்டும். இதுபற்றி பேரூராட்சி ஊழியர்கள் அலட்சியமாக இருப்பதால், எதிர்காலத்தில் இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இவற்றை தடுக்க பேரூராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாயில் குடிநீர் கலந்து வீணாவதை தடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Pothatturpet ,Pallipattu ,Pallipatu ,Dinakaran ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை