×

நூற்றாண்டை கண்ட கிங் கட்டிடத்தின் புனரமைக்கும் பணிகள் மும்முரம்: பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

* சிறப்பு செய்தி
நூற்றாண்டை கண்ட கிங் கட்டிடத்தில் புனரமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் அமைந்துள்ள கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம் நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 1905ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கட்டிடம் விரிவாக்கத்துடன் 1914ம் ஆண்டு பொறியியல் ஒப்பந்ததாரரான மாசிலாமணி என்பவரால் கட்டப்பட்டது. இந்த கட்டிடமானது T-வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பெரிய அறைகள் மற்றும் அரங்குகள் ஆய்வகங்கள் மற்றும் அலுவலகங்களாகப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு தளங்களை கொண்டுள்ள இந்த கட்டிடத்தில் கூடார வடிவிலான நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

இது நவம்பர் 7, 1899ம் நாளன்று அப்போதைய சென்னை மாகாணத்தின் சுகாதார ஆணையராக இருந்த டபிள்யூ.ஜி.கிங் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இதன் முதல் இயக்குநராக கர்னல் வால்ட்டர் கவென் கிங் என்பவர் செயல்பட்டு வந்தார். இந்நிலையத்தின் முன்னோடியாக இருந்ததால் பின்னாளில் அவர் பெயர் சூட்டப்பட்டது. அதேபோல், தடுப்பூசி முறையின் மூலமாக பெரியம்மையை முற்றிலும் ஒழித்தமைக்குப் பொறுப்பாக இந்தியாவின் அமைந்துள்ள முக்கிய நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தமிழ்நாட்டில் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களுக்கான பரிந்துரை மையங்களில் ஒன்றாகச் செயல்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகள் செயலாற்றி வருகின்றன.

அவற்றில் சர்வதேச தடுப்பூசி மையம், துணை மருத்துவக் கல்வி வாரியம் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப பள்ளி ஆகியவை அடங்கும். மேலும் இந்த நிலையத்தில் பாம்புக் கடிக்கான எதிர்ப்பு விஷம் தயாரித்தல், ஆன்டிஜென்கள், ஆன்டிசெரா, பாக்டீரியா கலாசாரங்கள், சிறிய விலங்குகள், பாக்டீரியா மற்றும் வைராலஜி நோய்களைக் கண்டறிதல் மற்றும் உணவு மாதிரி சோதனை ஆகியவற்றை பராமரித்தல் மற்றும் வழங்குதல் ஆகியவையாவும் செயல்பட்டு வந்துள்ளது. மேலும், கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனம் விளையாட்டுத் துறையைச் சார்ந்த பல வீரர்களை உருவாக்கியுள்ளது.

அவர்கள் மாநில அளவிலான பல போட்டிகளில் இந்நிறுவனத்தின் பெயரில் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளனர். இங்கு அமைந்துள்ள ஜென்னர் கூடம் எனப்படுகின்ற கூடம் தடுப்பூசியின் தந்தை என்று பெயர் பெற்ற எட்வர்ட் ஜென்னர் பெயரில் உள்ளதாகும். இந்த வளாகத்தில் அமைந்துள்ள முக்கிய சிவப்பு கட்டிடம் பாரம்பரிய கட்டமைப்பாக அடையாளம் காணப்பட்டு தொல்லியல் கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இந்நிலையம் செயல்பட்டுவருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கட்டிடமானது பின்னாளில் சேதமடைய தொடங்கியது. அதனை கருத்தில் கொண்டு தமிழகத்தின் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாத்து புனரமைப்பு செய்யும் பொருட்டு, பொறியாளர் குழுவினர் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்படி, 2022-23ம் நிதியாண்டின் பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கையின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு 17 பாரம்பரிய கட்டிடங்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைத்து புனரமைக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி 17 கட்டிடங்களை பழமை மாறாமல் சீரமைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த பணிகளை தமிழக பொதுப்பணித்துறை தொடங்கியது. இதில், கிண்டி உள்ள கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள பிரதான நிர்வாக பாரம்பரிய கட்டிடம் ரூ.7.70 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில் : கிங் வளாகத்தில் அமைந்துள்ள இந்த கட்டிடமானது ரூ.8.3 கோடியில் புனரமைக்கப்படுகிறது. முன்னதாக ரூ.7.70 கோடி என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் பின்னர் அதன் மதிப்பானது உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டிடம் பழமை மாறாமல் புனரமைப்பதற்காக ஒப்பந்தம் கடந்த மாதம் நிறைவடைந்துள்ளது.

அதன்படி டி மாணிக்கம் அண்டு கோ என்ற நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பழமையானது என்பதால் அதன் அமைப்பு மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளது. தற்போது கட்டிடத்தில் ஒரு புறம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தாலும் மறுபுறம் மருத்துவம் சார்ந்த இதர பணிகளும் நடைபெற்று வருகிறது. சாதாரணமான சிமெண்ட் இல்லாமல் பழமையான முறைப்படியே மறுசீரமைக்கப்பட உள்ளது. அதாவது, இந்த கட்டிடம் கட்டப்பட்டபோது பின்பற்றப்பட்ட அதே கட்டிடக் கலை பாணியில் மீண்டும் புனரமைப்பு பணிகள் தொடங்கப்படுகிறது. குறிப்பாக சாதாரணமான சுண்ணாம்பு பூச்சு இல்லாமல் பழமை வாய்ந்த தீர்வை பூச்சு முறையே பயன்படுத்தப்படும். இந்த பணிகள் 18 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post நூற்றாண்டை கண்ட கிங் கட்டிடத்தின் புனரமைக்கும் பணிகள் மும்முரம்: பொதுப்பணித்துறை அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : King ,PWD ,News ,
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்