×

திருட்டு, வழிப்பறி, கொள்ளை என 25 ஆண்டில் 14 மாநிலத்தில் 1,200 குற்ற வழக்குகள்: கோடீஸ்வர குற்றவாளி மீண்டும் கைது

கொல்கத்தா: திருட்டு, வழிப்பறி, கொள்ளை என கடந்த 25 ஆண்டில் 14 மாநிலங்களில் 1,200 குற்றங்களை செய்த பலே குற்றவாளியை மேற்குவங்க போலீசார் மீண்டும் கைது செய்தனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியை சேர்ந்த நதீம் குரேஷி (45) என்பவன், சமீபத்தில் டெல்லியில் நடந்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டான். பின்னர் அவன் ஜாமீனில் வெளியே வந்தான். தற்போது அவனை மற்றொரு வழக்கில் மேற்குவங்க மாநிலத்தின் பிதான்நகர் போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘கடந்த 25 ஆண்டுகளாக 14 மாநிலங்களில் 1,200க்கும் மேற்பட்ட கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட நதீம் குரேஷியை மீண்டும் கைது செய்துள்ளோம். அவனுக்கு மும்பை, புனே போன்ற நகரங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

அவனது குழந்தைகள் புகழ்பெற்ற பள்ளிகளில் படிக்கிறார்கள். நாடு முழுவதும் பல மாநிலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட அவன், அவ்வப்போது ஜெயிலுக்கு ெசல்வதும் பின்னர் ஜாமீனில் வெளியே வருவதும் வாடிக்கையாக கொண்டுள்ளான். கடந்த 2021ம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் சவுரவ் அபாசனில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் 12 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தான். ஆனால் தடயங்கள் சிக்காததால் அவனை கைது செய்ய முடியவில்லை. ராஜஸ்தான் காவல்துறையினரால் நதீம் குரேஷி கைது செய்யப்பட்டதை அறிந்தோம். அதனால் அங்கு சென்று அவனை பிடித்து விசாரித்த போது, ரூ. 12 லட்சத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டான்.

இருப்பினும், காஜியாபாத்தில் நடந்த திருட்டு வழக்கில் தண்டனை பெற்று திகார் சிறைக்கு மாற்றப்பட்டான். கடந்த 2021ம் ஆண்டு முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவனை, எட்டாவது முறையாக கைது செய்துள்ளோம். மேற்குவங்கத்தில் மட்டும் அவன் மீது 23 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவனது கொள்ளை நுணுக்கங்களை கற்ற சிலர், ‘நதீம் கும்பல்’ என்ற பெயரில் பல மாநிலங்களில் கொள்ளையடித்து வருகின்றனர். அவர்களுக்கு சிறையில் நதீம் குரேஷி பயிற்சி அளித்துள்ளான் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

The post திருட்டு, வழிப்பறி, கொள்ளை என 25 ஆண்டில் 14 மாநிலத்தில் 1,200 குற்ற வழக்குகள்: கோடீஸ்வர குற்றவாளி மீண்டும் கைது appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Palle ,Dinakaran ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...