×

மாமூல் கேட்டு ரகளையில் ஈடுபட்ட பாஜ நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளில் வழக்கு

மாதவரம்: ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட சச்சிதானந்தம் தெருவில் ஜான்பாய் என்பவருக்குச் சொந்தமான பழைய வீட்டை இடித்து, அதில் உள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றும் வேலையை அப்துல் காதர் மற்றும் அவரது மகன் முகமது பாசில் ஆகியோர் ரவிக்குமார் என்பவர் மூலம் மேற்கொண்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பாஜ கட்சியை சேர்ந்த 76வது வார்டு வட்டத் தலைவர் ஜனார்த்தன குமார், திருவிக நகர் தொகுதி பொதுச் செயலாளர் தேவராஜ் மற்றும் திருவிக நகர் தொகுதி கிழக்கு மண்டலத் தலைவர் முரளி ஆகியோர் அப்பகுதிக்கு வந்து, கட்டிடக் கழிவுகளை எடுக்கும் முகமது பாசிலிடம், எங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுங்கள் என கேட்டுள்ளனர்.

உடனே முகமது பாசில் செல்போன் மூலம் அவரது தந்தை அப்துல் காதரை தொடர்பு கொண்டு ஜனார்த்தன குமாரிடம் செல்போனை கொடுத்து தனது தந்தையிடம் அவர் பேச வைத்துள்ளார். அவர் நாளை காலை 8 மணிக்கு வாருங்கள் நேரில் பேசலாம் எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும் கட்டிடக் கழிவுகளை எடுக்க விடாமல் தொடர்ந்து ஜனார்த்தனகுமார் மற்றும் அவருடன் வந்த தேவராஜ், முரளி ஆகிய மூவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஜனார்த்தனகுமாரே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி உதவி ஆய்வாளர் உமாபதி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இவர்கள் மாமூல் கேட்டது போலீசாருக்குத் தெரிய வந்தது. இந்நிலையில் திடீரென ஜனார்த்தன குமார் தான் வைத்திருந்த ஹெல்மெட்டால் பொக்லைன் இயந்திரத்தின் ஹெட்லைட்டை அடித்து நொறுக்கினார். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து அவர்கள் கிளம்பிச் சென்றனர். இதுகுறித்து பொக்லைன் உரிமையாளர் சந்தோஷ் (26), ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார், மாமூல் கேட்டு நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட ஜனார்த்தனகுமார் (43), தேவராஜ், முரளி ஆகிய 3 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து ஓட்டேரி போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.

The post மாமூல் கேட்டு ரகளையில் ஈடுபட்ட பாஜ நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Mamool ,Baja ,Mathavaram ,Janbai ,Sachchidanandam Street ,Otteri ,Mamul ,Dinakaran ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...