×

போர்வெல் குழியில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் மீட்பு: 8 மணி நேர போராட்டம் பலனளித்தது

நாளந்தா: பீகாரில் போர்வெல் குழியில் தவறி விழுந்த 4 வயது சிறுவனை, 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்டனர். பீகார் மாநிலம் நாளந்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குல் கிராமத்தைச் சேர்ந்த டோம்மன் மஞ்சி என்பவரின் மகன் சிவம் குமார் (4), தனது வீட்டின் அருகே மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அப்பகுதியில் திறந்த நிலையில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சிவம் குமார் தவறி விழுந்தான். தகவலறிந்த மீட்புப் படையினர், ஜேசிபி இயந்திரத்தை கொண்டு ஆழ்துளை கிணற்றுக்கு இணையான குழியை அப்பகுதியில் தோண்டினர். 40 அடி ஆழத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனின் உயிரைக் காக்கும் ெபாருட்டு, குழிக்குள் குழாய்கள் மூலம் ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்பட்டது.

மீட்பு பணிகள் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஷஷாங்க் ஷுபாங்கர் தலைமையிலான அதிகாரிகள், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சிறுவனை மீட்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் சிவம் குமார் உயிருடன் மீட்கப்பட்டான். பின்னர் அந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, வர்த்மான் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அந்த சிறுவன் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

The post போர்வெல் குழியில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் மீட்பு: 8 மணி நேர போராட்டம் பலனளித்தது appeared first on Dinakaran.

Tags : Bourwell Pit ,Nalanda ,Bihar ,Borwell Pit ,
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!