×

அடையாறு அடர்வனக்காடு பகுதியில் 32,320 நாட்டு மரக்கன்று விதையில் நாற்றங்கால் உருவாக்கும் பணிகள்: மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

 

சென்னை: பக்கிங்காம் கால்வாய் கரையில் உள்ள மாநகராட்சியின் அடர்வனக் காடு பகுதியில், நாட்டு மரக்கன்று விதைகளை கொண்டு 32,320 மரக்கன்றுகளுக்கான நாற்றங்கால் உருவாக்கும் பணியினை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட இந்திரா நகர் 2வது அவென்யூ, பக்கிங்காம் கால்வாய் கரையில் உள்ள மாநகராட்சியின் அடர்வனக் காடு பகுதியில், சென்னை மாநகராட்சி, ரோட்டரி கிளப் ஆப் சென்னை மிராக்கி ரிட் மற்றும் கம்யூனிட்ரீ ஆகியன இணைந்து 32,320 மரக்கன்றுகளுக்கான நாற்றங்கால் உருவாக்கும் பணியினை சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன், அப்போலோ மருத்துவமனை துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி, ரோட்டரி மாவட்ட ஆளுநர் மகாவீர் போத்ரா, ரோட்டேரியன் சிவபாலா ராஜேந்திரன், கம்யூனிட்ரீ நிறுவனர் ஹபீஸ் கான் ஆகியோர் முன்னிலையில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் கொய்யா மற்றும் நாட்டு மரக்கன்று விதைகள் கொண்டு நாற்றங்கால் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நாற்றங்கால் உருவாக்கும் பணியானது 3 வார காலத்தில் முடிவடையும். இதனைத் தொடர்ந்து இச்செடிகள் பசுமை சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் பயன் அளிக்கின்ற வகையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடப்பட்டு பராமரித்து வளர்க்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாநகராட்சி அலுவலர்கள், ரோட்டரி சங்கம், கம்யூனிட்ரீ அமைப்பின் நிர்வாகிகள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அடையாறு அடர்வனக்காடு பகுதியில் 32,320 நாட்டு மரக்கன்று விதையில் நாற்றங்கால் உருவாக்கும் பணிகள்: மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Adyar forest ,Chennai ,Buckingham Canal ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...