×

₹140 கோடியில் போதமலைக்கு புதிய சாலை

ராசிபுரம், ஜூலை 23: மலைவாழ் மக்களின் நீண்டநாள் ேகாரிக்கை நனவாகும் விதமாக, ₹140 கோடி மதிப்பீட்டில் போதமலைக்கு 31 கி.மீ.,புதிய சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி தெரிவித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி., செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று தெரிவித்ததாவது: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியம் கீழுர் ஊராட்சியில் உள்ள போதமலையில் கீழூர், மேலூர், கெடமலை குக்கிராமங்கள் உள்ளன. சுதந்திரம் அடைந்தது முதல் இந்த மலை கிராமங்களுக்கு சாலை வசதிகள் இல்லை. மலைவாழ் மக்கள் வசிக்கும் இங்கு ஏறத்தாழ 2000 ஹெக்டர் பரப்பளவில் சாமை, கேழ்வரகு, கம்பு, திணை, அரிசி ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இந்த மலைப் பகுதியில் ஆரம்ப பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளது. கடந்த திமுக ஆட்சியில், 1996ம் ஆண்டுதான் மின்சார வசதி செய்து தரப்பட்டது.

இந்த பகுதியில் ஏறத்தாழ 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். போதிய சாலை வசதிகள் இல்லாததால் வேலை, கல்விக்காக பலர் மலை அடிவாரத்திற்கு குடிபெயர்ந்து உள்ளனர். இந்த கிராம மக்கள் சாலை அமைத்து தரக்கோரி பல முறை மனுக்கள் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தற்போது போதமலைக்கு சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. மலை மற்றும் வனப்பகுதியில் சாலை அமைக்க பசுமை தீர்ப்பாயத்தில் அனுமதி பெற வேண்டும்.கடந்த 2021ம் ஆண்டு நான் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.துரைசாமி பெயரில், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

சாலை அமைக்கும் பணிகளுக்காக, அதற்கு இணையாக வேறு இடத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து, பராமரிக்க தேவையான நிதியை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி, நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் ஊராட்சி உரம்பு பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தில் 18 ஹெக்டர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சாலை அமைக்கும் பணிக்கு இணையாக, மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் வெண்ணந்தூர் ஒன்றிய நிதியில் இருந்து ஏறத்தாழ ₹2.13 கோடி, ஒன்றிய வனத்துறைக்கு செலுத்தப்பட்டுள்ளது.

பசுமை தீர்ப்பாயத்தின் மரக்கன்றுகளை பராமரிப்பதற்கான நிதி உள்ளிட்ட விவரங்களோடு, முன்மொழிவு அனுப்பப்பட்டு, ஒன்றிய வனத்துறை மற்றும் மாநில அரசு வனத்துறையில் அனுமதி பெறப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி, வெண்ணந்தூர் ஒன்றியம் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் கவனத்திற்கு நானும், வனத்துறை அமைச்சரும் கொண்டு சென்றோம். இந்த கோரிக்கையை ஏற்று, நபார்டு திட்டத்தின் மூலம் ₹112 கோடியும், மாநில அரசின் பங்காக ₹28 கோடி என மொத்தம் ₹140 கோடி மதிப்பிலான நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனை அடுத்து, வடுகம் முதல் கீழுர் வழியே மேலூர் வரை 21.17 கிமீ தொலைவிற்கும், புதுப்பட்டி முதல் கெடமலை வரை 9.9 கிமீ தெலைவிற்கும் சாலைகள் அமைக்கும் பணிக்கு, ₹140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சாலை அமைக்கும் பணிக்காக ₹9.73 லட்சம் மதிப்பீட்டில், எல்லை நிர்ணயம் செய்யும் பணியும், ₹36.21 லட்சம் மதிப்பீட்டில் காப்புக்காடுகளில் சாலை பணிக்கு அளவீடு செய்து, எல்லை கற்கள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது, வெண்ணந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் துரைசாமி, பிடிஓ.,க்கள் பிரபாகரன், தனம், மலைவாழ் மக்கள் சங்க கனகராஜ் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.

The post ₹140 கோடியில் போதமலைக்கு புதிய சாலை appeared first on Dinakaran.

Tags : Bothamalai ,Rasipuram ,Bodhamalai ,
× RELATED ராசிபுரம் போதமலையில் உள்ள 1,142...