×

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 450 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்

*2பேர் படகில் தப்பியோட்டம்

தூத்துக்குடி : தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 450 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டது. படகில் தப்பிய கடத்தல்காரர்கள் இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பெட்ரோல், விரளி மஞ்சள், பலசரக்கு பொருட்கள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவை பல மடங்கு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் இலங்கைக்கு அருகில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென் மாவட்ட கடற்கரை பகுதிகளிலிருந்து இந்த பொருட்களை சிலர் அதிக லாபத்திற்காக கடத்தி வருகின்றனர். கடத்தலை தடுக்க கடலோர காவல்படையினர் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி டிஎஸ்பியின் தனிப்படை ஏட்டுகள் மாணிக்கராஜ், முத்துப்பாண்டி, முத்துராஜ், திருமணிராஜன், மகாலிங்கம், செந்தில், சண்முகராஜா, தமிழ் ஆகியோர் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரை ஓரமாக நின்ற ஒரு படகில் 2 பேர் பெட்ரோல் கேன்களை ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதைப்பார்த்த தனிப்படையினர் அந்த படகை சுற்றி வளைக்க முயன்றனர்.

அப்போது அவர்கள் 2 பேரும் படகில் ஏறி கடலுக்குள் தப்பிச் சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து கரையில் இருந்த தலா 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட 9 பெட்ரோல் கேன்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு நின்ற மற்றொரு படகும் பறிமுதல் செய்யப்பட்டது. பெட்ரோல் கேன்கள் வடபாகம் போலீசில் ஒப்படைக்கப்பட்டன. படகில் தப்பிய 2 பேரும் யார்? என்பது குறித்தும், அவர்களை தேடும் பணியிலும் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 450 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Toothukkudi ,Thoothukudi ,Euthukaran ,Dinakaran ,
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்