×

உம்மன் சாண்டியின் உடல் அரசு மரியாதையின்றி அடக்கம்

திருவனந்தபுரம்: பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18ம் தேதி அதிகாலை காலமான கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடல் திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து நேற்று முன்தினம் காலை 7.15 மணியளவில் அவரது சொந்த ஊரான கோட்டயத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அஞ்சலி செலுத்துவதற்காக வழி நெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரண்டனர். இதனால்
திருவனந்தபுரத்திலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ள கோட்டயத்திற்கு செல்ல 28 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. வழிநெடுகிலும் நள்ளிரவிலும் ஆயிரக்கணக்கானோர் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி உம்மன் சாண்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக காத்திருந்தனர்.

திருநக்கரை மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்ட பின்னர் மாலையில் புதுப்பள்ளியிலுள்ள அவரது குடும்ப வீட்டுக்கும், பின்னர் உம்மன் சாண்டி புதிதாக கட்டிக் கொண்டிருந்த வீட்டுக்கும் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் இரவு 8 மணியளவில் உடல் புதுப்பள்ளியிலுள்ள செயின்ட் ஜார்ஜ் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 20 பிஷப்புகளின் தலைமையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதன்பின் பாதிரியார்களை மட்டும் அடக்கம் செய்யும் இடத்தில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கல்லறையில் உம்மன் சாண்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முழு அரசு மரியாதை தேவையில்லை என்று உறவினர்கள் கேரள அரசிடம் எழுத்து மூலமாக தெரிவித்திருந்ததால் உம்மன் சாண்டியின் உடல் முழு அரசு மரியாதையின்றி அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், மேற்குவங்க மாநில கவர்னர் ஆனந்த போஸ், நடிகர்கள் மம்மூட்டி, சுரேஷ்கோபி, திலீப் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

The post உம்மன் சாண்டியின் உடல் அரசு மரியாதையின்றி அடக்கம் appeared first on Dinakaran.

Tags : Santi ,Thiruvananthapuram ,Kerala ,Umman Santi ,Bangalore ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...