×

கீழ்கதிர்பூர் அண்ணா பட்டுப்பூங்காவில் ரூ.4.62 கோடி மதிப்பீட்டில் தறிக்கூடம் கட்டும் பணி: அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: கீழ்கதிர்பூரில் உள்ள அண்ணா பட்டுப்பூங்காவில் ரூ.4.62 கோடி மதிப்பீட்டில் தறிக்கூடம் கட்டும் பணியினை அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, காஞ்சிபுரம் கீழ்கதிர்பூரில் அமைந்துள்ள அண்ணா பட்டுப்பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு, பட்டுப்பூங்காவில் தமிழ்நாடு மாநில கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்) சார்பாக அமைக்கப்படும் தறிக்கூடத்தினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த தறிக்கூடமானது, 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 100 கைத்தறிகள் நிறுவும் வகையில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் பட்டுப்பூங்காவிற்கு ரூ.1.52 கோடி செலுத்தப்பட்டுள்ளது. அண்ணா பட்டுப்பூங்காவில் நடைபெற்று வரும் இளைஞர்களுக்கான கைத்தறி பயிற்சியில் பங்கேற்கும் 30 நபர்களுக்கு, பயிற்சிக்கான பாடத்திட்ட புத்தகங்களை அமைச்சர் வழங்கினார். பின்னர், அமைச்சர் காந்தி கூறுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கைத்தறி செநவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கைத்தறி தொழிலின் வளர்ச்சிக்கும், வாழ்வாதாரத்திற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி, நெசவாளர்களின் நலனை கண் இமைபோல் காத்து வருகிறது.

தமிழ்நாடு அரசு கைத்தறி துறையின் கீழ், 1112 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 89 சங்கங்கள் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கங்களாகும். இச்சங்கங்கள் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பும், நியாயமான கூலி மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது’ என்றார். இதனையடுத்து அமைச்சர், பட்டுப்பூங்காவின் செயல்பாடுகள் குறித்தும், கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, பட்டுப்பூங்காவின் செயல்பாடுகள் குறித்து, பட்டுப்பூங்காவின் செயல் அலுவலரிடம் கலந்தாலோசனை மேற்கொண்டு, பட்டுப்பூங்காவின் வளர்ச்சிக்கான அறிவுரைகள் வழங்கினார்.

இந்நிகழ்வினை தொடர்ந்து, கலைஞரின் நூற்றாண்டு விழாவின் ஒருபகுதியாக தமிழ்நாடு ஜரிகை ஆலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் காந்தி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர், தமிழ்நாடு ஜரிகை ஆலையில் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் தமிழ்நாடு ஜரிகை ஆலையில் அமைய இருக்கும் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கும் இடத்தினையும் ஆய்வு செய்தார். அப்போது, தமிழ்நாடு ஜரிகை ஆலையில், சிறிய அளவிலான கைத்தறி பூங்கா ரூ.4.62 கோடி திட்ட மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான நிதியானது தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.3 கோடி நிதியுதவி மற்றும் ரூ.1.62 கோடி திட்ட முன்னோடிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ளது. இப்பூங்காவில் சுமார் 100 கைத்தறிகள் நிறுவப்பட்டு, பட்டு மற்றும் பருத்தி ரகங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன்மூலம் சுமார் 200 நபர்கள் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் 1971ம் ஆண்டு தமிழ்நாடு ஜரிகை ஆலை அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்து இருந்த 4.7 ஏக்கர் பரப்பளவிலான இடத்திற்கு, தமிழ்நாடு ஜரிகை ஆலையின் பெயரில் பட்டாவினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியிடம் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி ஆணையர் விவேகானந்தன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டுப்பூங்கா நிர்வாகிகள், தமிழ்நாடு ஜரிகை ஆலை மேலாண்மை இயக்குநர், நெசவாளகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கீழ்கதிர்பூர் அண்ணா பட்டுப்பூங்காவில் ரூ.4.62 கோடி மதிப்பீட்டில் தறிக்கூடம் கட்டும் பணி: அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Anna Pattupoonga ,Kylkadirpur ,Minister ,Gandhi ,Kanchipuram ,Kilikadirpur ,Anna Patpupoonga ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...