×

புதியம்புத்தூரில் பற்றி எரியும் குப்பைக்கிடங்கு

ஓட்டப்பிடாரம், ஜூலை 21: புதியம்புத்தூரில் பற்றி எரியும் குப்பைக்கிடங்கில் இருந்து பரவும் புகைமூட்டத்தால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். புதியம்புத்தூரில் இருந்து தட்டப்பாறை செல்லும் ரோட்டில், புதியம்புத்தூர் போலீஸ் நிலையம் அருகே பஞ்சாயத்துக்கு உட்பட்ட குப்பைக் கிடங்கு, ரோட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதனருகே கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பல்வேறு குடியிருப்புகளும் உள்ளன. இப்பகுதியை கடந்துதான் அருகிலுள்ள பள்ளிகளுக்கும் மாணவர்கள் செல்ல வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த குப்பைக்கிடங்கு தீப்பற்றி எரிவது தொடர் கதையாக உள்ளது. இந்த குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாளைய கோரிக்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், பஞ். குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று குப்பைக்கிடங்கில் மீண்டும் தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் மளமளவென பரவிய தீயால், அப்பகுதி முழுவதுமே புகைமூட்டமாக காட்சியளித்தது. இதன் காரணமாக அப்பகுதி முதியவர்கள், சிறார்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாயினர். அவ்வழியாக சென்ற மாணவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே தான் செல்ல முடிந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஓட்டப்பிடாரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இப்பகுதியை சேர்ந்த யூனியன் கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், குப்பைக்கிடங்கு எரிவதை படம்பிடித்து இதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சமூக வலைதளத்தில் புகார் மனு அனுப்பினார். அப்பகுதி மக்கள் கூறுகையில், குப்பைக்கிடங்கு பற்றி எரிவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறோம். இதனை இடமாற்றம் செய்ய வேண்டும். அதுவரை குப்பைக்கிடங்கை சுற்றி 10 அடி உயரத்திற்கு பாதுகாப்பு சுவர்களை எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

The post புதியம்புத்தூரில் பற்றி எரியும் குப்பைக்கிடங்கு appeared first on Dinakaran.

Tags : Nayambutur ,Ottapidaram ,Nayambuthur ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் ஒடிசா வாலிபர் பலி