×

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக புதிய சட்டம் எதையும் ஒன்றிய அரசு இயற்றவில்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம்

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக ஒன்றிய அரசு சில விதிகள் கொண்டு வந்ததே தவிர, சட்டம் எதுவும் இயற்றவில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார். இதுகுறித்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு முதன்முறையாக தமிழக அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என்று சொல்லி இருக்கிறது. ஆனால் தனியாக எந்த சட்டமும் ஒன்றிய அரசு இயற்றவில்லை. அதை ஒன்றிய அரசின் வழக்கறிஞர் தந்தால் படித்து பார்த்து நாங்கள் தெரிந்துகொள்ள தயாராக இருக்கிறோம். ஒன்றிய அரசு சில விதிகளை கொண்டு வந்திருக்கிறார்கள். அதுகூட இணையவழி சூதாட்டம் நடத்துபவர்களை பாதுகாக்கும் ஒன்றாகத்தான் அமைந்திருக்கிறது. அரசுக்கு வருவாய் வருவதை குறிக்கோளாக கொண்டுதான் இருக்கிறது.

ஏறக்குறைய 40க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஒன்றிய அரசு இன்றைக்கு விதிகளில் திருத்தத்தை கொண்டு வந்துவிட்டு, சட்டம் கொண்டு வந்துள்ளோம் என்று கூறி உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது, இந்த வாதங்களை மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இதை தெரிவிக்கிறோம். நமது அரசியல் சாசனத்தில், பொதுபட்டியல், மத்திய அரசு பட்டியல், மாநில அரசு பட்டியல் என இருக்கிறது. இது மாநில சட்டப்பிரிவின்படிதான் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஆப்லைனில் இரண்டு பேர் மட்டுமே விளையாடுகிறார்கள்.

ஆனால் ஆன்லைனில் 3வது நபராக புரோகிராமர் என்று ஒருவர் இருக்கிறார். அந்த விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் அவரால் மாற்ற முடியும். புரோகிராமை எப்படி வடிவமைக்கிறார்களோ அதுபடிதான் அங்கு நடக்கும். எனவேதான், ஆன்லைனில் ரம்மி விளையாடுவதால் ஒவ்வொருவரும் பணத்தை இழக்கிறார்கள். அதனால் தற்கொலைக்கு ஆளாகிறார்கள் என்ற கருத்தை தெளிவாக சொல்லிக் கொண்டே இருக்கிறோம். இந்த வித்தியாசத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வேறுபாடுகளை ஒன்றிய அரசு உணர்ந்து உரிய திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார். ஆன்லைனில் ரம்மி விளையாடுவதால் ஒவ்வொருவரும் பணத்தை இழக்கிறார்கள். அதனால் தற்கொலைக்கு ஆளாகிறார்கள்.

The post ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக புதிய சட்டம் எதையும் ஒன்றிய அரசு இயற்றவில்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Government of the Union ,Minister Ragubati ,Chennai ,Union Government ,The Government of the Union ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...