×

வரும் 28ம் தேதி ராமேஸ்வரத்தில் அண்ணாமலை நடைபயணத்தை அமித்ஷா தொடங்கி வைக்கிறார் : நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்பு; பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை அமித்ஷா வரும் 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
‘என் மண் என் மக்கள்’ என்ற முழக்கத்தோடு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வருகிற 28ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து நடைபயணத்தை தொடங்குகிறார். இந்த பயணத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார். மொத்தம் 5 கட்டமாக யாத்திரை நடக்கிறது.

முதல் கட்டத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி நடைபெறும். முதற்கட்ட யாத்திரை ஆகஸ்ட் 22ம் தேதி வரை நடைபெறும். ஜனவரி மாதம் சென்னையில் யாத்திரை நிறைவடையும். மோடி அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் பயணம் அமையும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று 3வது முறையாக மோடி பிரதமராகும் இலக்கோடு இந்த பயணத்தை மக்கள் மத்தியில் நடத்துகிறோம். பிரசாரத்தின் போது பிரதமர் மோடி தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் செய்திருக்கும் சாதனைகளை 10 லட்சம் புத்தகங்களாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

மேலும் அண்ணாமலை மக்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒரு கோடி குடும்பங்களுக்கு விநியோகிக்க இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் 11 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில் அகில இந்திய தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். இது தவிர நூற்றுக்கணக்கான தெருமுனை கூட்டங்கள் நடக்கிறது. முக்கியமான இடங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்படும். அதை வைத்து தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. யாத்திரையில் பங்கேற்க ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். யாத்திரை நிறைவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது. யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வரும் 28ம் தேதி ராமேஸ்வரத்தில் அண்ணாமலை நடைபயணத்தை அமித்ஷா தொடங்கி வைக்கிறார் : நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்பு; பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Annamalai trek ,Rameswaram ,PM ,Pon. Radhakrishnan ,Chennai ,BJP ,president ,Annamalai walk ,
× RELATED சொல்லிட்டாங்க…