×

ஐஏஎஸ் அதிகாரிகளை காங்கிரஸ் தவறாக பயன்படுத்தியதாக ேபாராட்டம் 10 பாஜ எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: சபாநாயகர் யு.டி.காதர் அதிரடி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜ உறுப்பினர்கள் 10 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று காலை தொடங்கியதும், பாஜ உறுப்பினர் ஆர்.அசோக் எழுந்து பேசும்போது, பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சில அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த 17 மற்றும் 18 தேதிகளில் நடந்தது. அந்த கூட்டத்திற்கு அரசு துறையில் பணியாற்றும் சில மூத்த அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டனர். அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தி இருப்பது சரியா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பிரச்னை காரணமாக அவையில் சில நிமிடம் கூச்சல்-குழப்பம் நிலவியது. சபாநாயகர் யு.டி.காதர் தலையிட்டு ஆளும் கட்சி உறுப்பினர்களை இருக்கையில் அமரும் படி உத்தரவிட்டார். பாஜவின் குற்றச்சாட்டுக்கு சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல் பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை ஓட்டலுக்கு அழைத்து செல்ல அரசு அதிகாரிகளை பயன்படுத்தியதாக கூறுவது உண்மையல்ல. சில மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வந்தாலோ அல்லது இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள தலைவர்கள் வந்தால், அவர்கள் வந்து செல்லும் வரை மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கடமை. அதை தான் செய்தார்கள்.என்றார்.

பாஜவினர் ரகளை: அப்போது அமைச்சரின் பதிலுக்கு அதிருப்தி வெளிப்படுத்திய பாஜ உறுப்பினர் சுனில்குமார் உள்பட பலர் ரகளையில் ஈடுபட்டனர். கூச்சல்-குழப்பம் நீடித்ததால் சபாநாயகர் அவையை 15 நிமிடம் ஒத்தி வைத்தார். மீண்டும் அவை கூடியபோது துணை சபாநாயகர் ருத்ரப்பா எம்.லாமணி அவை நடத்தினார். அப்போது கூண்டோடு எழுந்த பாஜ உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன் தர்ணா போராட்டம் நடத்தியதுடன் காகிதங்களை கிழித்து அவர் மீது வீசினர். இதனால் அவையை 3 மணிக்கு துணை சபாநாயகர் ஒத்தி வைத்தார். உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் அவை கூடியதும் பாஜ உறுப்பினர்கள் இதே பிரச்னையை கையில் எடுத்தனர். இதையடுத்து, ரகளையில் ஈடுபட்டவர்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல் சபாநாயகரிடம் வலியுறுத்தி கடிதம் கொடுத்தார். அதையேற்று அஷ்வத் நாராயண், சுனில்குமார், யஷ்பால் சுவர்ணா, ஆர்.அசோக், உமாநாத் கோட்டியான், அரவிந்த பெல்லத், பரத்ஷெட்டி, வேதவியாஷ் காமத், தீராஜ் முனிராஜ் மற்றும் அரக ஞானேந்திரா ஆகிய 10 உறுப்பினர்களை கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

The post ஐஏஎஸ் அதிகாரிகளை காங்கிரஸ் தவறாக பயன்படுத்தியதாக ேபாராட்டம் 10 பாஜ எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: சபாநாயகர் யு.டி.காதர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress' ,Speaker ,UT Khader ,Bengaluru ,Karnataka Legislative Assembly ,Assembly ,BJP MLAs ,U.D. Khader ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...