×

ஸ்டெம் பார்க் பணிகள் ஒரு மாதத்தில் நிறைவடையும்

தூத்துக்குடி, ஜூலை 19: பசுமை தூத்துக்குடி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும் இடங்களில் பூங்காக்கள், மரக்கன்று நடுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த பல ஆண்டுகளாக குளம்போன்று காட்சியளித்த, அம்பேத்கர் நகரில் உள்ள 8 ஏக்கர் நிலத்தில் ரூ.28 கோடி மதிப்பில் நவீன வசதியுடன் கூடிய அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பூங்கா என்று அழைக்கப்படும் ஸ்டெம் பார்க் கட்டப்பட்டு வருகிறது. இதனை நேற்று பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது: தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் அறிவியல் திறனை வளர்க்கும் வகையில் பிரமாண்டமான ஸ்டெம் பார்க் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் தொடர்பாகவும், பொழுதுபோக்குவதற்கான இடம், கூட்டரங்கு, கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பூங்கா அமைக்கப்படுகிறது.

பூங்காவில் மனிதனின் பரிணாம வளர்ச்சி, ஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதள மாதிரி, டைனோசர் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் உருவங்கள், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பாதிப்புகளை விளக்கும் டிஜிட்டல் அரங்குகள், மாணவர்களுக்கு திரை காட்சிகள் மூலம் அறிவியல் குறித்து அறிவை வளர்ப்பதற்கான நவீன டிஜிட்டல் மினி திரையரங்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன. கோவைக்கு அடுத்து தூத்துக்குடியில்தான் அத்தனை வசதிகளுடன் ஸ்டெம் பார்க் அமைக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் தங்களுக்கு உரியதாக கருதி பாதுகாக்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் நிறைவடையும், என்றார்.ஆய்வின்போது வடக்கு மண்டல சுகாதார அலுவலர் அரிகணேஷ், கவுன்சிலர்கள் நாகேஸ்வரி, தெய்வேந்திரன், அந்தோணி மார்ஷலின், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மாநகர சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அந்தோணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post ஸ்டெம் பார்க் பணிகள் ஒரு மாதத்தில் நிறைவடையும் appeared first on Dinakaran.

Tags : Stem Park ,Thoothukudi ,Green ,Stem ,Park ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது