×

வரும் 2035ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை 50 சதவீதமாக மாற்ற வேண்டும்: ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி பேட்டி

சென்னை: உயர்கல்வியில் சேரும் மாணவர் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 50 சதவீதம் இருக்கிறது. இந்தியாவில் இது 27 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவிலும் 2035ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக மாற்ற வேண்டும் என ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது குறித்து சென்னை ஐஐடி வளாகத்தில் இயக்குநர் காமகோடி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தான் புதிய படிப்புகளை அறிமுகம் செய்கிறோம். நம்முடைய இளைஞர்களுக்கு கல்வி அறிவை புகட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படி செய்ய தவறினால் இன்னும் 10 ஆண்டுகளில் கல்வி அறிவு இல்லாத நாடாக மாறிவிடுவோம். 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு நல்ல கல்வியை புகட்ட வேண்டும். அதற்கு ஆணிவேராக பள்ளிகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

உயர்கல்வியில் சேரும் மாணவர் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 50 சதவீதம் இருக்கிறது. இந்தியாவில் இது 27 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவிலும் 2035ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக மாற்ற வேண்டும். சென்னை ஐ.ஐ.டி. கிராம கலந்துரையாடல் மையம் தற்போது தமிழ்நாட்டில் 80 மையங்களில் இருக்கிறது. நம் நாடு தலைமைத்துவம் பெற வேண்டும் என்றால், புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோர்கள் அதிகமாக வருவது மிக அவசியம். நாம் வேலை பெறுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். வெறும் 30 இடங்களுக்கு 9 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்திருந்தன.

தற்போது ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் ஒரு வளாகத்தை சென்னை ஐ.ஐ.டி. அமைத்து இருக்கிறது. வெளிநாட்டில் வேறு எந்த ஐ.ஐ.டி.யும் செய்யாததை முதன் முதலாக சென்னை ஐ.ஐ.டி. செய்துள்ளது. அக்டோபர் 24ம் தேதி முதல் தான்சானியாவில் வகுப்புகள் தொடங்க இருக்கின்றன. தேசிய கல்வி கொள்கையில் ‘விஷ்வ குரு’ என்ற திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது. சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியதில் பிஎஸ் தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து டிரோன் டெக்னாலஜி குறித்த படிப்பும் அறிமுகம் செய்ய கேட்கிறார்கள். குறிப்பாக பள்ளி ஆசிரியர்களை மேம்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். கணக்கு பாடம் இல்லாமல் எந்த படிப்பும் முழுமையாகாது. அதனால் பிஎஸ்சி கணிதம் மற்றும் கம்ப்யூட்டிங், பிஎல். டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சுடன் இணைந்து செய்யலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

இதற்கு சில அனுமதி தேவைப்படுகிறது. இதன் மூலம் நல்ல கண்ககு ஆசிரியர்களை தயார்ப்படுத்த முடியும். கணிதத்தில் பூஜ்ஜியம் உள்பட ஏராளமாக எண்களை கண்டுபிடித்ததும் நாம் தான். ஆனால் இன்று பலர் கணிதம் படிப்பை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. கணிதம் பாடத்துக்கு 2 தலையணைகள் போல் பெரிய புத்தகத்தை கொடுப்பதால், அவர்கள் பயப்படுகிறார்கள். கணக்கு சூத்திரத்தை அவர்கள் எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் கற்பிக்க வேண்டும். இந்தியாவுக்கு நல்ல கணித ஆசிரியர்கள் தேவை இருக்கிறது. இதற்காக நாங்கள் அடுத்த முயற்சியை எடுக்கிறோம்.

The post வரும் 2035ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை 50 சதவீதமாக மாற்ற வேண்டும்: ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,GI Kamakodi ,T.D. Chennai ,Tamil Nadu ,GI T ,Kamakodi ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...