![]()
மதுராந்தகம்: மேல்மருவத்தூர் அருகே பள்ளி மாணவர் திடீரென மாயமானான். ஆனால், மாணவனின் பள்ளி புத்தக பை, உணவு பைகள் அப்பகுதியில் உள்ள கிணற்றில் மிதந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மகன் சஞ்சய் 13 என்பவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த சனிக்கிழமை அன்று பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், மாணவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மாணவனின் நண்பர்கள் ஆகியோர் வீடுகளில் தேடி வந்தனர்.
ஆனால், எங்கும் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை. இதனையடுத்து, அவர்கள் மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில், பள்ளியின் அருகே உள்ள கிணறு ஒன்றில் மாணவனின் ஸ்கூல் பேக் மற்றும் லஞ்ச் பேக் ஆகியவை மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்பு துறையினர் உதவியுடன் அந்த கிணற்றில் போலீசார் தீவிரமாக தேடினர்.
பின்னர், மோட்டார் பம்புகள் வைத்து கிணற்றில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றிவிட்டு பார்த்த போதும் மாணவன் உடல் கிடைக்கவில்லை. மாணவன் கிணற்றில் இறக்கவில்லை என்பது உறுதியானது. ஆனால், அவரது ஸ்கூல் பேக் மற்றும் லஞ்ச் பேக்குகள் மட்டுமே கிணற்றில் மிதந்துள்ளன என்பது தெரிகிறது. இந்த பேக்குகளை மாணவனே வீசிவிட்டு சென்றானா அல்லது வேறு யாரும் வீசி எறிந்து மாணவனை கடத்தினார்களா என தெரியவில்லை. இந்த சம்பவம் மேல்மருவத்தூர் மற்றும் சோத்துப்பாக்கம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post மேல்மருவத்தூர் அருகே பள்ளி மாணவன் திடீர் மாயம்: புத்தகப்பை கிணற்றில் மிதந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.
