×

தமிழ்நாடு நாள் விழாவில் புகைப்பட கண்காட்சி

 

சேலம், ஜூலை 18: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று, தமிழ்நாடு நாள் விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் பேரணி மற்றும் புகைப்பட கண்காட்சி நடக்கிறது. இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதி, தமிழ்நாடு திருநாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்தகைய சிறப்புமிக்க தினத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில், இன்று (18ம் தேதி) முதல் வரும் 23ம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடுகிறோம். இதன்படி இன்று காலை 9.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் பேரணி நடக்கிறது. இப்பேரணி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை வழியாக சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிவடையவுள்ளது.

அங்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித்துறை மூலம் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, ஏற்கனவே மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. அதேபோன்று, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி அரங்கு அமைக்கப்படுகிறது. அதனை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இன்று முதல் 23ம் தேதி வரை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு நாள் விழாவில் புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Day ,Salem ,Collector ,Office ,Tamil Nadu Day Photo Exhibition ,Dinakaran ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்