×

ஆடி அமாவாசை வழிபாடு கன்னியாகுமரி, குழித்துறையில் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம்

நாகர்கோவில், ஜூலை 18: ஆடி மாதம் பிறந்ததை தொடர்ந்து குமரி மாவட்ட அம்மன் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அமாவாசையும் சேர்ந்து வந்ததால், பலி தர்ப்பணம் கொடுக்கவும் பலர் நீர் நிலைகளில் குவிந்தனர். தமிழ் மாதங்களில் ஆடி மாதம் பல்வேறு சிறப்புகள் நிறைந்தது ஆகும். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதி தேவியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். எனவே இந்த மாதத்தில் அம்மன் வழிபாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அம்மன் கோயில்களில் ஆடி திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மிகவும் விஷேசமானதாகும். ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை போன்ற நாட்களும் சிறப்பானதாகும்.

அதன்படி நேற்று (17ம் தேதி) ஆடி பிறப்பு ஆகும். இந்த வருடம் ஆடி மாதம் இரு அமாவாசை வருகிறது. முதல் அமாவாசை, மாத பிறப்பு தினமான நேற்று வந்தது. ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுப்பார்கள். மாத பிறப்புடன் அமாவாசை வந்ததால் ேநற்று பலி தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலிலும் பலர் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுத்தார்கள். ஆனால் வழக்கமான கூட்டம் இல்லை. ஆடி மாத 2 வது அமாவாசை ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வருகிறது. அன்றைய தினம், பலி தர்ப்பணம் கொடுக்க ஏராளமானவர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கேரளா பஞ்சாங்கப்படி, ஆடி அமாவாசை நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பலி தர்ப்பணம் கொடுக்க ஏராளமானவர்கள் குவிந்தனர். திருவனந்தபுரம் பகுதிகளில் இருந்தும் அதிகம் பேர் வந்திருந்தனர்.

குமரி மாவட்ட கோயில்களில் ஆடி அமாவாசை வழிபாடு என்பது, ஆகஸ்ட் 16ம்தேதி ஆடி கடைசியில் வரும் அமாவாசை அன்று தான் நடக்கிறது. அன்றைய தினம் தான் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் ஆடி அமாவாசை வழிபாடு நடக்கிறது. ஆடி பிறந்ததை தொடர்ந்து நேற்று கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், ஆலமூடு இசக்கியம்மன் கோயில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இன்று ஆடி முதல் செவ்வாய்க்கிழமை ஆகும். இதையொட்டி தாழக்குடி அருகே உள்ள அவ்வையாரம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வார்கள். கொழுக்கட்டை படையல் வைத்து அம்மனை வழிபாடு செய்வார்கள். இதையொட்டி சிறப்பு பஸ்களும், தாழக்குடிக்கு இயக்கப்படுகின்றன.

The post ஆடி அமாவாசை வழிபாடு கன்னியாகுமரி, குழித்துறையில் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் appeared first on Dinakaran.

Tags : Adi Amavasai ,Kanyakumari ,Kulitura ,Nagercoil ,Adi ,Amman ,Kumari ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...