×

நாகர்கோவிலில் பிரபல வணிக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

நாகர்கோவில், ஜூலை 18:நாகர்கோவில் வடசேரி அருகே பிரபல வணிக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோட்டில் உள்ள ஒரு வணிக கட்டிடத்தில் தரை தளம் மற்றும் முதல், 2ம் தளம் உள்ளன. தரை தளத்தில் மூன்று கடைகள் அமைந்துள்ளன. முதல் தளம் மற்றும் 2 வது தளத்தில் அலுவலக கட்டிடம் மற்றும் பொருட்கள் வைப்பதற்கான அறை உள்ளிட்டவை உள்ளன. நேற்று மதியம் 11.30 மணி அளவில் திடீரென இந்த கட்டிடத்தில் 2 வது தளத்தில் இருந்து புகை வந்தது. நேரம் செல்ல செல்ல புகை அதிகரித்து கட்டிடம் முழுவதும் தீ பரவியது. கீழ் தளத்தில் இருந்தவர்களும் முதல், 2ம் தளத்தில் இருந்தவர்களும் அலறி அடித்து கீழே ஓடி வந்தனர்.

இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார், உதவி கோட்ட அலுவலர் துரை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். கட்டிடத்தின் அருகில் உயரழுத்த மின் கம்பிகள் சென்று கொண்டிருந்தன. இதனால் உடனடியாக தண்ணீரை பீய்ச்சி அடிக்க முடியாத நிலை இருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னர் தான் தீயணைப்பு துறையினர் உள்ளே சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். புகை வெளியேறுவதற்காக கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. 2 வது தளத்தில் இருந்த அறைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் உடனடியாக அகற்றப்பட்டது. அதிர்ஷ்டவசமாக சிலிண்டர் வெடிக்கவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக தகவல் அறிந்ததும் வடசேரி போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் அசம்பு ரோட்டில் மெயின் ரோட்டில் உள்ளது. இந்த சாலை வழியாக தான் புத்தேரி, இறச்சக்குளம், பூதப்பாண்டி, அருமநல்லூர், கடுக்கரை, தெரினசங்கோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள், வாகனங்கள் செல்லும். தீ விபத்து காரணமாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சாலைகளில் நின்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

பகலில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், இரவில் இந்த சம்பவம் நடந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும் என்றும் அந்த பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து நடந்த கட்டிடத்தை சுற்றி ஏராளமான கடைகள் வர்த்தக நிறுவனங்கள் அமைந்திருக்கிறது. பிரபல வங்கியின் ஏடிஎம் மையமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தீ விபத்து குறித்து அறிந்ததும் மின் பணியாளர்களும் வந்து மின்சார இணைப்புகளை துண்டித்தனர். இந்த தீ விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post நாகர்கோவிலில் பிரபல வணிக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Vadassery ,Dinakaran ,
× RELATED சரலூர் ஆற்றங்கரை சாலையில் இணைக்கப்படாத வடிகாலால் தேங்கும் மழைநீர்