×

சென்னை அருகே கடன் பிரச்னையால் விபரீத முடிவு மனைவி, குழந்தையை கொன்று விட்டு ஐ.டி. ஊழியர் தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை அருகே கடன் தொல்லையால் மனைவி, குழந்தையை கொன்றுவிட்டு, ஐடி ஊழியர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், குகை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் மகன் அரவிந்த் (32). இவர், ஐடி படிப்பு படித்துவிட்டு, சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது தன்னுடன் வேலை பார்த்த கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த மேல்பட்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் – ராஜலட்சுமி தம்பதியரின் மகள் சுஜிதா (32) என்பவரை காதலித்து, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, பெண் குழந்தை பிறந்ததும், அவரை கவனித்துக் கொள்வதற்காக சுஜிதா தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

இந்நிலையில் சில காரணங்களுக்காக அரவிந்த், தான் செய்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஓஎம்ஆர் சாலையில் நாவலூரில் உள்ள பர்ஸ்ட் சோர்ஸ் என்ற மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதற்காக நாவலூரை அடுத்துள்ள தாழம்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வங்கிக் கடன் மூலம் வாங்கி மூவரும் அங்கே குடியேறினர். இந்நிலையில் சுஜிதா வேலைக்கு செல்லாததால் வீட்டுக் கடன் மற்றும் வீட்டின் அலங்காரங்களுக்காக வாங்கிய கடன்களை அரவிந்த் ஒருவரின் மாத ஊதியத்தில் அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து தன்னுடன் பணியாற்றும் நண்பர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக தெரிகிறது. மேலும், வீட்டுக்கடனை முறையாக கட்டாததால் வங்கி தரப்பில் தாழம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டு, அங்கு விசாரணைக்கு வந்த நாகராஜ் இனி ஒழுங்காக மாத தவணை கட்டுவதாக எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார். இந்நிலையில் தனக்குள்ள மொத்த கடனையும் அடைக்க விரும்பி தனது பெற்றோர் மற்றும் மாமனாரிடம் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இருவரும் விரும்பி காதல் திருமணம் செய்து கொண்டதால், இரு வீட்டாரும் பணம் தர மறுத்துள்ளனர். இருவரும் வேலைக்கு சென்று கடனை அடைக்குமாறு கூறி உள்ளனர். இதனால் கடந்த இரு மாதங்களாக அரவிந்த் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை 9.30 மணியளவில் தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் பேசிய அரவிந்த், தான் தன்னுடைய மனைவி சுஜிதா மற்றும் மகள் ஐஸ்வர்யா (7) ஆகியோரை கொலை செய்து விட்டதாகவும், தானும் தற்கொலை செய்ய மாத்திரை போட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு, எஸ்ஐக்கள் கமல தியாகராஜன், கோபி ஆகியோர் அரவிந்த் கூறிய முகவரிக்கு சென்று பார்த்தனர். அப்போது, வீட்டில் அரவிந்த் சேரில் அமர்ந்தபடி இருந்தார். படுக்கை அறையில் கையில் வெட்டுக் காயத்துடன் சுஜிதா ரத்தம் வழிந்த நிலையில் சடலமாகவும், அருகிலேயே அவர்களது மகள் ஐஸ்வர்யா பிணமாக கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அரவிந்தை சமாதானப்படுத்தி என்ன நடந்தது என்று விசாரித்தனர். தனக்கு ஏராளமான கடன் இருந்ததாகவும், உறவினர்களிடம் கேட்டு எந்த உதவியும் கிடைக்காததால், குடும்பத்துடன் இறந்து விடலாம் என்று நினைத்து கடந்த 16ம்தேதி இரவு உணவு அருந்திவிட்டு மனைவிக்கு மயக்க மாத்திரையை கொடுத்து அவர் மயக்கமடைந்ததும் அவருடைய மணிக்கட்டில் உள்ள நரம்பினை துண்டித்து விட்டதாகவும் கூறினார். மேலும், மகள் ஐஸ்வர்யாவுக்கு தூக்க மாத்திரைகளை அதிகளவில் கொடுத்துவிட்டு, தானும் அதிகளவில் தூக்க மாத்திரைகளை போட்டுக்கொண்டு அரை மயக்கத்தில் தனது கையில் கத்தியால் கீறிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கூறினார்.

ஆனால், நேற்று காலை தனக்கு மயக்கம் தெளிந்து விழிப்பு ஏற்பட்டு பார்த்தபோது, தான் கையில் அறுத்துக்கொண்ட இடத்தில் நரம்பு அறுபடாமல் போயிருப்பதால் பிழைத்துக் கொண்டு இருப்பதை உணர்ந்து பக்கத்து அறையில் சென்று பார்த்தபோது மனைவியும், குழந்தையும் இறந்து கிடப்பதை பார்த்து போலீசுக்கு போன் செய்ததாகவும் கூறினார். இதையடுத்து போலீசார், அவரை மீட்டு ரத்தின மங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்யப்பட்டு கிடந்த சுஜிதா, ஐஸ்வர்யா ஆகியோரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சுஜிதாவின் தந்தை சிவகுமாருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பண்ருட்டியில் இருந்து வந்த சுஜிதாவின் தந்தை சிவகுமார் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தை பள்ளிக்கரணை காவல் இணை ஆணையர் ஜோஸ் தங்கையா, கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

* லேப்டாப்பை கொடுத்திடுங்க
கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதற்காக தனது நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்பட்ட லேப்டாப்பை அதன் பையில் போட்டு வைத்திருந்த அரவிந்த், அதன் மேல் ஒரு பேப்பரில் அந்த நிறுவனத்தின் பெயர், அதிகாரியின் பெயர் ஆகியவற்றை எழுதி அவர்களிடம் லேப்டாப்பை சேர்த்து விடுமாறும் எழுதி இருந்தார்.

* 17 லட்சம் கடன்தான் பிரச்னையா?
மனைவி மற்றும் பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்து உயிர் தப்பிய அரவிந்த் தனக்கு ரூ.17 லட்சம் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஐடி நிறுவனங்களில் இருப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கடன் வாங்கி வீடு வாங்குகின்றனர். மேலும், கார், ஆடம்பர பொருட்கள் என அனைத்தையும் வங்கிக்கடன் மூலமே வாங்குகின்றனர். அரவிந்துக்கும் ரூ.85 ஆயிரம் மாத ஊதியம் வந்துள்ளது. மனைவி வேலைக்கு சென்றிருந்தால் அவரும் அதே ஊதியத்தை பெற்றிருக்க முடியும். கடன் பிரச்னையால் குடும்பத்துடன் தற்கொலை என்பதை போலீசார் நம்பவில்லை. அதனால் வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அரவிந்திடம் கார் கூட இல்லை. மோட்டார் சைக்கிள்தான் வைத்துள்ளார்.

* மோட்டார் சைக்கிளை எடுத்துக்கங்க..
தற்கொலை செய்வதற்கு முன்பு அறையில் உள்ள பலகை ஒன்றில் ஆத்விக் பாலாஜி என்பவர் பற்றி லவ் யூ என்று எழுதி லட்டு கண்ணா என்றும் எழுதி உள்ளார். அவர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். இன்னொரு பலகையில் தாங்கள் இறந்த பிறகு யார் யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பெயர் மற்றும் செல்போன் எண்களை எழுதி வைத்துள்ளார். தனது மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணையும் அதே பலகையில் எழுதி வைத்த அரவிந்த், அது நிறுத்தப்பட்டிருந்த பார்க்கிங் எண்ணையும் எழுதி வைத்திருந்தார்.

* எட்டிப்பார்க்காத குடியிருப்புவாசிகள்
அரவிந்த் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 2 கொலை, ஒரு தற்கொலை முயற்சி நடந்தும் ஒருவர் கூட வந்து என்னவென்று விசாரிக்கவில்லை. ஒருவர் கூட போலீசாருக்கு உதவ முன்வரவில்லை. இதனால் போலீசாரே விசாரித்து உள்ளே சென்றபோதுதான் இச்சம்பவம் வெளியில் தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் வந்து விசாரணை நடத்தி அரவிந்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மற்ற இருவரின் சடலங்களை எடுக்க ஆயத்த வேலைகளை செய்துக் கொண்டிருந்தனர். இவ்வளவு களேபரங்களும் நடந்துக் கொண்டிருந்த நிலையில் அரவிந்தின் பக்கத்து வீட்டுக்காரர் ஸ்விக்கியில் தனக்கான காலை உணவை ஆர்டர் செய்திருந்தார். அவருக்கு உணவை எடுத்து வந்த ஊழியர் கதவைத் தட்டியதும் வெளியே வந்த அந்த நபர் ஏன் இவ்வளவு போலீசுடன் வந்து உள்ளீர்கள் என்று ஊழியரிடம் அதிர்ச்சியுடன் கேட்டார். பக்கத்து வீட்டில் இரட்டை கொலை என்றதும் அப்படியா என்று ஆச்சர்யத்துடன் கேட்டுவிட்டு உணவுடன் உள்ளே சென்று கதவை மூடிக் கொண்டார்.

The post சென்னை அருகே கடன் பிரச்னையால் விபரீத முடிவு மனைவி, குழந்தையை கொன்று விட்டு ஐ.டி. ஊழியர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,I.S. TD ,UN TD ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்