சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் நள்ளிரவில் மழைநீர் கால்வாய் பணிக்கு பள்ளம் தோண்டியபோது, கட்டிடம் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்னையில் புதிய வடிகால் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதேபோல், நீர்வழித்தடங்களை தூர்வாரும் பணி, வடிகால்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. சமீபத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி சென்னையின் பல இடங்களில் பணிகள் வேகமெடுத்துள்ளன.
அதன்படி, சிந்தாதிரிப்பேட்டை ஜெயின் கோயில் அருகே அருணாச்சலம் தெருவில் உள்ள பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, அங்குள்ள கட்டிடத்தின் அருகே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த பள்ளத்தை ஒட்டியுள்ள ஒரு கட்டிடத்தில் உள்ள 2 கடைகளின் முன்புறம் இடிந்து சரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடைகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. எனினும், பொதுமக்கள் யாரும் கட்டிடத்தின் அருகே செல்லாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மற்றொரு சம்பவம்: திருவொற்றியூர் வடக்கு மாட வீதி, செட்டித் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர் நிர்மலா (50). இவர், தங்கியுள்ள வீடு மிகவும் பழமையானது.
இதனால் பல இடங்களில் பழுதடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென இந்த வீட்டு மாடியின் பால்கனி இடிந்து விழுந்தது. இடிந்த பாகங்கள் வெங்கடேசன் என்பவரது ஓட்டு வீட்டில் விழுந்தன. அப்போது வெங்கடேசனின் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. உடைந்த சுவரின் ஒரு பகுதி தெருவில் சிதறியதால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த நவீன் கிஷோர் (3) என்ற சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துசென்று சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சிந்தாதிரிப்பேட்டையில் நள்ளிரவில் கட்டிடம் சரிந்ததால் பரபரப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.