×

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு விழுப்புரம் மாணவன் முதலிடம்: முதல் 10 இடங்களில் சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாணவர்கள்

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்படும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது. தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசையில் பட்டியலில் விழுப்புரம் மாணவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கையில் சேலம் மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 37, அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் 2, தனியார் மருத்துவக் கல்லூரிகள் 32, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் 28 உள்ளன.

இந்த கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொதுமருத்துவம், பல் மருத்துவ படிப்புகளை படித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் 6,326, பிடிஎஸ் இடங்கள் 1,768 உள்ளன. இதுதவிர தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் 1509, பிடிஎஸ் 395 இடங்கள் உள்ளன. மேற்கண்ட படிப்பில் இந்த ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்புக்கு பிறகு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். அதன்பிறகு, பிறகு நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு நீட் தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 13ம் தேதி வெளியானது.

இதையடுத்து, தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்து இருந்த 40 ஆயிரத்து 193 மாணவ மாணவியர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்து வந்தது. அதன் தொடர்ச்சியாக மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 16ம் தேதி வெளியிடப்படும் என்றும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கவுன்சலிங் ஜூலை 20ம் தேதி ெதாடங்கப்படும் என்றும், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் மாதம் 5, 6ம் தேதிகளில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2ம் கட்ட கவுன்சலிங், ஆகஸ்ட் 9ம் தேதியும் மூன்றாம் கட்ட கவுன்சலிங் ஆகஸ்ட் 31ம் தேதியும் நடத்தப்படும்.

இந்த மருத்துவ இடங்களில் சேராத மாணவர்களின் எண்ணிக்கையை இறுதி செய்த பிறகு, காலியிடங்களுக்கு செப்டம்பர் மாதம் 21ம் தேதி இறுதி மருத்துவ கவுன்சலிங் நடத்தி முடிக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது. இதையடுத்து, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களில் மாணவ-மாணவியரை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள், கடந்த மாதம் 28ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை பெறப்பட்டன.

அதன்படி 40 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் வந்தன. இது கடந்த ஆண்டைவிட 3,994 கூடுதல். மேற்கண்ட விண்ணப்பங்களில், அரசு பள்ளிகளில் படித்து 7.5 % இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற 3,042 பேரும், விளையாட்டு பிரிவின் கீழ் 179 பேரும், முன்னாள் படை வீரர் ஒதுக்கீட்டின் கீழ் 401 பேரும், மாற்றுத் திறனாளிகள் 98 பேரின் விண்ணப்பங்களும் அடங்கும். இந்த விண்ணப்பங்களை பரிசீலித்த பிறகு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலின் படி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் விழுப்புரம் மாணவர் பிரபஞ்சன்(720 மதிப்பெண்கள்) முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல, அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் சேலம் மாணவி கிருத்திகா (569 மதிப்பெண்கள்) முதலிடம் பிடித்துள்ளார்.

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தர வரிசையில் முதல் 10 இடங்களில் சங்ககிரி மாணவர் வருண்(715) முதலிடம் பிடித்துள்ளார். அரசு இட ஒதுக்கீடுகளை பொறுத்தவரையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்கள் 6,326, அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பிடிஎஸ் இடங்கள் 1,768, மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் இடம் 473, 7.5% ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்புக்கான இடங்கள் 133 உள்ளன.

இந்த இடங்களில் சேர்வதற்காக மொத்தம் 26 ஆயிரத்து 806 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 25 ஆயிரத்து 856 விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில் ஏற்கப்பட்டன. அதேபோல, 7.5% ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற மொத்தம் 3,042 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 2,993 விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் ஏற்கப்பட்டன. தனியார் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீடு எம்பிபிஎஸ் இடங்கள் 1509, பிடிஎஸ் 395 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்காக 13 ஆயிரத்து 394 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவற்றில் தகுதியான 13 ஆயிரத்து 179 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில், 7.5% ஒதுக்கீட்டின் கீழ் சேர உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்காக கூடுதலாக 606 இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மருத்துவ படிப்பு சேர்க்கை கவுன்சலிங்கை தொடங்க தயார் நிலையில் இருக்கிறோம். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சலிங் தொடங்கினால், தமிழ்நாட்டில் 25ம் தேதி மருத்துவ கவுன்சலிங் தொடங்கும். 7.5% ஒதுக்கீடு இடங்கள் உள்பட சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நடக்கும். பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடக்கும். தென்காசி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும் என்றும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும், நெக்ஸ்ட் தேர்வு கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

The post மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு விழுப்புரம் மாணவன் முதலிடம்: முதல் 10 இடங்களில் சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Chennai, Thiruvallur Kanchipuram ,CHENNAI ,MBBS ,BDS ,Education ,Chennai, ,Tiruvallur Kanchipuram ,
× RELATED மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...