×

மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட குடிநீர் கிணற்றில் கிடந்தது அடை… தேன் அடை…

விக்கிரவாண்டி, மே 16: விக்கிரவாண்டி அருகே குடிநீர் கிணற்றில் மனிதக்கழிவு கலந்ததாக கூறப்படும் சம்பவம் உண்மையில்லை என்றும் கிணற்றில் இறங்கி சோதனை நடத்தியபோது, மனிதக்கழிவு எதுவும் கலக்கவில்லை என்றும், தேனடை தான் கிடந்ததாக விழுப்புரம் கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள கஞ்சனூர் கே.பி பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணற்றில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் கூறியிருந்தனர். நேற்று காலை பொதுமக்கள் அந்த கிணற்றின் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கஞ்சனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-கலெக்டர் சுதன்ஜெய் நாராயணன், ஆர்டிஓ சாகுல் அமீது, ஊராட்சி உதவி இயக்குனர் விக்னேஷ், தாசில்தார் யுவராஜ், செஞ்சி டிஎஸ்பி கவினா, கஞ்சனூர் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, குடிநீர் வடிகால் வாரிய செயற்ெபாறியாளர் மோகன் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மனிதக்கழிவு கலந்ததாக கூறப்பட்ட கிணற்றில் இறங்கி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து தேனடையை ஆய்வுக்கு வந்த குழுவினர் கைப்பற்றினர். அதன்பிறகு குடிநீர் கிணற்றில் மனிதக்கழிவு கலக்கவில்லை, தேனடைதான் கிடந்துள்ளது என்பதை உறுதி செய்யப்பட்ட பிறகு பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் கலெக்டர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கஞ்சனூர் மதுரா கே.ஆர். பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் கிணற்றில் மனிதக்கழிவு கலப்பு என்ற தகவல் முற்றி
லும் தவறான செய்தியாகும். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர், காணை வட்டார வளர்ச்சி அலுவலர், செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியோர் அடங்கிய குழு சம்பந்தப்பட்ட இடத்தினை பார்வையிட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் மேற்படி கிணற்றில் உள்ள நீரை பரிசோதனை செய்ததில் குடிநீர் முற்றிலும் பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மலம் என செய்திகளில் வரப்பெற்ற பொருளானது தேன்அடை என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. கே.ஆர்.பாளையம் கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் முன்னிலையில் எடுத்துக் காண்பிக்கப்பட்டது. இருப்பினும் மேற்படி கிணற்றின் மீது இரும்பு கம்பிகளால் வேலி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட குடிநீர் கிணற்றில் கிடந்தது அடை… தேன் அடை… appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Villupuram Collector ,Villupuram district… ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டியில் திறந்தவெளி...