×

அதிகத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ₹17.70 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை பணி தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

திருவள்ளூர், ஜூலை 16: அதிகத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத்துறை மூலம் ₹17.70 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் பகுதியில் கல்லாற்றின் கிளை ஆறாக கூவம் ஆறு உருவாகிறது. இது பேரம்பாக்கம், கடம்பத்தூர், மணவாளநகர், அரண்வாயல் வழியாக 72 கி.மீ. தூரம் ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் கேசவபுரம், ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் உள்ளன. இருப்பினும், மழை காலங்களில் அதிக அளவில் வீணாகும் தண்ணீரை தடுக்கும் வகையில் கூவம் ஆற்றில் முக்கிய இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நீர் வளத்துறை சார்பில் திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய 2 இடத்தில் தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், அதிகத்தூர் கிராம எல்லையின் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறை மூலம் 3வது தடுப்பணையாக ₹17.70 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த தடுப்பணை கடந்த பிப்ரவரி மாதம் 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர் – ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி துவக்கப்பட்டது.

இந்த தடுப்பணையில் 50 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். இதனால் அதிகத்தூர், ஏகாட்டூர், சேலை, தண்டலம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயரும். மேலும், அப்பகுதியில் உள்ள 600 ஏக்கர் விவசாய நிலங்கள் நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள், கால்நடைகள், பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய இந்த புதிய தடுப்பணை அமைந்துள்ளது. இந்த தடுப்பணை 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. மேலும் இப்பணி ஆகஸ்ட் மாத இறுதியில் முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அதிகத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ₹17.70 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை பணி தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Koovam river ,Adhikathur ,Tiruvallur ,Water Resources Department ,Dinakaran ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...