×

நொய்யல் ஆறு வறண்டதால் ஆடி அமாவாசை தினத்தில் பக்தர்கள் குளிக்க ஷவர் வசதி

தொண்டாமுத்தூர், ஜூலை 16: பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம், திதி கொடுக்க வரும் பொதுமக்கள் குளிப்பதற்காக பைப் லைன் அமைத்து, ஷவர் வசதி செய்து தரப்படுகிறது. இதனை பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, செயல் அலுவலர் மணிகண்டன், கோயில் இணை ஆணையர் விமலா ஆகியோர் பார்வையிட்டனர். இதையடுத்து இந்த ஏற்பாட்டை செய்த பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டு குவிந்து வருகிறது.

ஆண்டுதோறும் இந்துக்கள் தங்களது முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்காக ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற தினங்களில் புண்ணிய நதிக்கரைகளில் தர்ப்பணம், திதி கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆடி அமாவாசை நாளை வருவதால் பேரூர் படித்துறையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டு திதி கொடுக்க உள்ளனர். கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோயில் அருகே நொய்யல் ஆற்றின் கரையோரம் தர்ப்பணம் மண்டபம் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்த படியாக பேரூரில் திதி கொடுப்பதை இந்துக்கள் பலர் தங்களது கடமையாக நினைக்கின்றனர். காவிரியின் மூத்த பொன்னு என்றழைக்கப்படும் நொய்யல் நதியில் நீராடி இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் அவர்கள் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் ஆடி அமாவாசை மற்றும் ஆடி பதினெட்டு ஆகிய நாட்களில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வருவதில்லை. இதனால் தர்ப்பணம் கொடுக்க வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்த முறை பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக கோயில் நிர்வாகம் மற்றும் பேரூர் பேரூராட்சி சார்பில் பைப் லைன் அமைத்து அவற்றில் 10க்கும் மேற்பட்ட ஷவர்கள் மூலம் பக்தர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஆடி அமாவாசைக்கு திதி கொடுக்க வரும் பக்தர்கள் நொய்யலில் குளிக்க முடியா விட்டாலும் பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள ஷவர்களில் குளித்து மகிழலாம் என பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாத்துரை தெரிவித்தார். இந்நிலையில் பைப் லைன் அமைப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கோயில் இணை ஆணையர் விமலா, பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆடிஅமாவாசை ஏற்பாடுகள் குறித்து சமூக ஆர்வலர் பேரூர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமாவாசைக்கு பேரூர் வருகை தருவர். அவர்களுக்குரிய பேருந்து வசதி, குடிநீர்வசதி, நடமாடும் கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும். தர்ப்பணம் மண்டபம் அருகே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கழிப்பிடங்களை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அவசர சிகிச்சைக்கும், முதலுதவி சிகிச்சைக்கும் தயார் நிலையில் ஒரு மருத்துவர் குழு, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நொய்யல் ஆற்றின் கரையோரம் நிறுத்தப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து சிறப்பு பேருந்து இயக்க வேண்டும்.

மேலும் சித்திரைச்சாவடி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் ஆடி 18 தினத்திலாவது நொய்யல் ஆற்றின் கரைக்கு வரும் பக்தர்கள் குளித்து மகிழ முடியும். மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் இணைந்து ஆற்றில் தண்ணீர் திறப்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து, பேரூர் தர்ப்பண மண்டப பிராமண புரோகிதர் சங்க நிர்வாகிகள் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும், பக்தர்கள் குளிப்பதற்காக ஷவர் அமைத்து கொடுப்பதை வரவேற்று, பேரூராட்சி நிர்வாகத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

The post நொய்யல் ஆறு வறண்டதால் ஆடி அமாவாசை தினத்தில் பக்தர்கள் குளிக்க ஷவர் வசதி appeared first on Dinakaran.

Tags : Adi Amavasi day ,Noyal river ,Thondamuthur ,Perur ,Aadi ,Amavasi ,
× RELATED தடுப்பணையில் மூழ்கி 3 மாணவர்கள் பலி