×

கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் தென்னை சாகுபடி

வருசநாடு : தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவதானப்பட்டி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம்.

அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது.

இங்கு நெல், பயிர் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையின் வரிசையில் ஏலம், மிளகு, காபி, ஆரஞ்சு, மா, சப்போட்டா, கொய்யா, இலவு விவசாயம் நடக்கிறது.விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன. இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடமலை மயிலை ஒன்றியத்தில் தென்னை விவசாயம் ஏராளமான ஏக்கர் நிலங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வாடல் நோய், கூன்வண்டு தாக்குதல், உரிய விலை கிடைக்காமையால் அழிவின் விளிம்பில் தென்னை விவசாயம் உள்ளது. மேலும் தென்னை விவசாயம் பரப்பை அதிகப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலைக்குண்டு மயிலாடும்பாறை சிங்கராஜபுரம் வருசநாடு தும்மக்குண்டு குமணன்தொழு மூலகடை உள்ளிட்ட ஊர்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கு பார்த்தாலும் தென்னை விவசாயம் அதிகளவில் காணப்பட்டது. ஆனால் தற்போது மக்கள் தொகை பெருக்கத்தினால் தென்னந்தோப்புகள் சில இடங்களில் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை விவசாயத்தில் கேரளாவில் இருந்து பரவிய வாடல்நோய் கூன்வண்டு தாக்குதல் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் போனதாலும் தென்னை விவசாயம் பாதிக்குமேல் குறைந்துவிட்டது. கடந்த ஆட்சியில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தென்னை விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, குமணன்தொழு, மூலக்கடை, பொன்னன்படுகை, தங்கம்மாள்புரம், உப்புத்துறை, தும்மக்குண்டு, உள்ளிட்ட பகுதிகளில் தென்னை, வாழை, எலுமிச்சை, தக்காளி உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாய பயிர்களை ஊக்குவிக்கும் வகையில் கடமலைக்குண்டு தோட்டக்கலைத்துறை வேளாண்மைத்துறை அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறை, நோய் தாக்குதல், சூறைக்காற்று போன்றவற்றால் வாழை, தென்னை சாகுபடி அதிகம் பாதிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக பருவமழை காலம் தவிர மற்ற நேரங்களில் தென்னை, வாழை சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையால் மகசூலில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் கடமலை மயிலை ஒன்றிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் கடமலைக்குண்டு தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று சாகுபடி பற்றியும் சொட்டுநீர் பாசனம் அமைப்பது பற்றி விளக்கிக் கூறி வருகின்றனர். இதனால் கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மானிய விலையில் இடுபொருட்கள்

கடமலை மயிலை ஒன்றிய பகுதியில் மேலும் தென்னை சாகுபடியினை அதிகரிக்கவும் தென்னை சாகுபடி விவசாயகளை பொருளாதார ரீதியாக உயர்த்தவும் வேளாண்மைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கவேண்டும். தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு அதிக மானிய விலையில் உரங்கள், நிலத்தில் உழவு செய்ய மினி டிராக்டர், மற்ற இதர இடுபொருட்களையும் வழங்கவேண்டும்.

விளைநிலங்களில் புதிததாக தென்னை சாகுபடி செய்ய ஊக்குவிக்க வேண்டும். தென்னை சாகுபடி செய்ய ஆர்வமாக உள்ள விவாசயிகளை வேளாண்மை அலுவலர்கள் சந்தித்து, அதிகம் லாபம் தரக்கூடிய தென்னை நாற்றுகளை மானிய விலையில் வழங்கி, அதற்கு நடவு, பராமரிப்பு, உரம், மருந்து தெளிப்பு உள்ளிட்டவைகள் வழங்கவேண்டும். இதனால் இப்பகுதியில் மீண்டும் தென்னை சாகுபடி புத்துயிர் பெற வாய்ப்புள்ளது என தென்னை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் தென்னை சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Mayiladumpara Union ,Kadamalaikundu ,Varusanadu ,Theni district ,Tamil Nadu-Kerala border ,
× RELATED க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அரசு...