×

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்: அடையாறு மகளிர் போலீசார் தீவிரம்

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் வழக்கில் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வரும் வாரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பலர் பேராசிரியர் ஹரிபத்மன் மற்றும் உதவி நடன கலைஞர்களான சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் என 4 பேர், பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த மார்ச் 29ம் தேதி கல்லூரி வளாகத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பிறகு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, போராட்டம் நடத்திய மாணவிகள் மற்றும் பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள், முன்னாள் மாணவிகளிடம் மார்ச் 31ம் தேதி நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலமாக பதிவு செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகள் மாநில மகளிர் ஆணைய இ-மெயில் மூலம் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே மாநில மனித உரிமை ஆணையம் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளின் பாலியல் புகார் குறித்து தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதன்படி, கடந்த ஏப்ரல் 11ம் தேதி மாநில மனித உரிமை ஆணைய எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு கல்லூரிக்கு சென்று இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி, கல்லூரி முதல்வர் பகல ராம்தாஸ் உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் சார்பில் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண் ஆகியோர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணை குழு கடந்த ஏப்ரல் 25ம் தேதி கலாஷேத்ரா கல்லூரியில் புகார் அளித்த மாணவிகள், மற்றும் பேராசிரியர்கள், உதவி நடன கலைஞர்களிடம் விசாரணை நடத்தினர். அதேநேரம், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடந்த 2019ம் ஆண்டு கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின்படி, பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் கைது செய்தனர். அதைதொடர்ந்து பாலியல் வழக்கு தொடர்பாக முன்னாள் மற்றும் தற்போது படித்து வரும் மாணவிகள் என 169 பேருக்கு சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மாணவிகள் அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். இதற்கிடையே மாணவிகள் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மன் 60 நாட்களுக்கு பிறகு பல நிபந்தனைகளுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் வழக்கில் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் வழக்கில் வரும் வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்: அடையாறு மகளிர் போலீசார் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kalashetra ,Adyar ,CHENNAI ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...