×

ங போல் வளை… யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

அகவையை அனுபவித்தல்!

சமீபத்தில் நீயா நானா எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறைகொண்ட பெண்கள் கலந்து கொண்டனர். அதில் ஒரு பெண் தனது பேத்தி தன்னை பாட்டி என அழைக்கக்கூடாது என்று கறாராக வாதாடினார். எனக்கு வயதாகிவிட்டது எனும் உணர்வை தருகிறது. ஆகவே பேத்தி என்னை அம்மா என்றோ பெயர் சொல்லியோ அழைக்கலாம் என தெரிவித்தார். அங்கிருந்த அத்தனை பெண்களும் இதை ஆதரித்தனர். ஆண்களுக்கும் இதே வயதாகுதல் சார்ந்து மிகப்பெரிய ஒவ்வாமை இருப்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.

இந்த ஒவ்வாமை ஏன் வருகிறது?

வயதாகுதல் என்பதை நோய் என்றே நாம் புரிந்து கொள்கிறோம். இது முதல் பிழை. அடுத்து வயதான பெரும்பாலானோர் உடல் மற்றும் உளச்சிக்கலை கொண்டவர்களாக மாறிவருவதை பார்த்து, நமக்கு இது நிகழக்கூடாது என நினைக்கிறோம். ஆகவே நாற்பது வயதிற்கு மேல் யாராவது வயது பற்றி பேசினாலே சிறு பதற்றம் கொள்கிறோம்.நாம் அகவையடைதலை நவீனமும் , மரபும் எப்படி அணுகுகிறது என்பதை தெரிந்து கொண்டால், போலி பாவனைகள் ஏதுமின்றி வயதை சரியாக நிர்வகிக்க கற்றுக்கொள்வோம். நவீன அறிவியல் ஒவ்வொரு உறுப்பு மண்டலங்களிலும் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை பட்டியலிட்டிருக்கிறது.

வயதாக வயதாக நமது இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தடித்தும், இறுக்கமாகவும் மாறிவிடுவதால், உயர் ரத்த அழுத்தம் முதல் இதயத்தில் அடைப்பு வரையான உபாதைகள் தொடங்குகிறது. எலும்பு மண்டலங்கள் சுருங்கத் தொடங்குகிறது, அதையொட்டி தசைகள் அதன் திடத்தன்மையை இழக்கிறது, இந்த இரண்டு காரணிகளால் கூன் போடுதல் உயரம் குறைதல் நிகழ்ந்து இணைப்புகளில் சமநிலை குலைகிறது. அதை தொடர்ந்து கைத்தடியின் துணையோ பிடிமானமோ இல்லாதபோது உடல் நடுக்கமும் தடுமாற்றமும் அதிகரிக்கிறது.

ஜீரண மண்டலத்தில் பெருங்குடலின் அமைப்பும், அளவும் மாறிவிடுவதால், உடலிலிருந்து கழிவுகள் வெளியேறுவதில் சிக்கல் உருவாகிறது. போதிய நீர் அருந்தாமை அல்லது சிறுநீரக மண்டலம் சரியாக இயங்காமை போன்ற உபாதைகள் வயது கூடும் பொழுது நிகழ்வது இயற்கையே. அத்துடன் நினைவுத்திறனும், சிந்திக்கும் திறனும் குறைந்து விடுவதும் நிகழ்கிறது. மேற்சொன்ன அனைத்து பிரச்னைகளுக்கும் துல்லியமான தீர்வுகளையும் அறிவியல் முன்வைக்கிறது. அதே வேளையில் மருந்து மாத்திரைகளால் உண்டாகும் பக்கவிளைவுகளையும் பட்டியலிடுகிறது. வயதானவர்களுக்கே இதன் தாக்கம் அதிகமாக நிகழ்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

வயது விகிதம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் சராசரி வயது விகிதம் 35-40ஆக இருந்தது. இன்று 70 வயதாக உயர்ந்திருக்கிறது. இந்திய மரபில் நூறு வயது என்பது வாழ்வை நான்கு பகுதிகளாக பிரித்து அறிந்து கொள்ள சொல்லப்படும் ஒரு காலக்கணக்கு.

ஆக, மாற்றாக சிலவற்றை முயன்று பார்க்கவேண்டியுள்ளது. அந்த மாற்று பயிற்சி திட்டம் யோகம், ஆயுர்வேதம், வர்மம் போன்ற ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.
இந்திய மரபில் நமது வாழ்வை, பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம் என ஒவ்வொரு இருபத்தி ஐந்து வருடங்களாக பகுக்கிறது. இதில் கிருஹஸ்தம் எனும் பகுதி முடிந்தவுடன் வயதாவது குறித்தும் மேற்கொண்டு நடத்தவேண்டிய வாழ்க்கைப் பயணம் குறித்தும் சில முக்கியமான திட்டத்தை முன்வைக்கிறது. அதிலிருந்து மேலும் சற்று முன்னகர்ந்து, யோகமரபு பாடத்திட்டங்களையும் பயிற்சிகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. சில மரபார்ந்த பள்ளிகளில் வானப்பிரஸ்த சாதனா எனும் திட்டமும் ‘ சந்நியாச சாதனா ‘எனும் இரண்டு முதல் நான்கு வருட பாடத்திட்டம் கூட இருக்கிறது.

மற்றவர்களுக்கு யோகமரபு ஆயுர்வேதத்தின் துணையுடன் ஒரு பயிற்சித்திட்டத்தை வைத்திருக்கிறது.யோகம் மூன்று வகையாக முதுமையை கையாள்கிறது முதலில் நீண்ட ஆயுள் என்பதை நீண்ட ஆரோக்யமான ஆயுள் என்றும், இரண்டாவதாக உடல் , மனம், உணர்ச்சிகள் மற்றும் சமூகத்தால் உண்டாகும் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வு என்றும் மூன்றாவதாக மீதியிருக்கும் வாழ்நாள் முழுவதும் நேர்மறை அம்சத்துடன் செல்லவேண்டிய திசையையும் இலக்கையும் குறித்ததாக இருக்கிறது.

உதாரணமாக காயகல்பம் எனும் சொல்லே, நீண்ட ஆரோக்கியமான வாழ்நாள் என்பதையே குறிக்கிறது, நாம் கேள்விப்படும் காயகல்ப பயிற்சிகள் எந்த வயதில் தொடங்கினாலும் சிறந்ததே. மேலே சொல்லப்பட்ட அறிவியல் காரணிகள் அனைத்திலும் இவ்வகை பயிற்சிகள் மிகப்பெரிய நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பயிற்சிகள் பெரும்பாலும் ‘காயம்’ எனப்படும் உடல் சார் பயிற்சிகளாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வகை பயிற்சிகளில் பெரும்பாலான உபாதைகள் நீங்கி தேவையான ஆற்றலுடன் செயல்பட்டுக்கொண்டிருக்க முடியும். இதற்கு அதிக உடல் உழைப்போ, நேரமோ தேவையில்லை ஒரு நாளில் இருபது முதல் முப்பது நிமிடங்களில் முடித்துவிடலாம்.

அடுத்த கட்ட பயிற்சிகள் வயதின் காரணமாக உடல் மனம் உள்ளிருக்கும் ஆற்றல் என மூன்றிலும் ஒரு தேக்கநிலையும், ஏதேனும் ஒரு நோய்க்கூறு தாக்கப்பட்ட அவஸ்தையும் கொண்டவர்களுக்கான பயிற்சிகள் அவற்றில் நிச்சயமாகவே ஆசன பிராணாயாம பயிற்சிகளுக்கு இணையாக தியானம் போன்ற, அகவயமான சில பயிற்சிகளாவது இருத்தல் நலம். இவற்றில் ஸத்கர்மா என்று சொல்லக்கூடிய உடல், உள்ளிருக்கும் உறுப்புகளை தூய்மை செய்யக்கூடிய ஆறுவிதமான பயிற்சிகளை கொண்ட பாடத்திட்டம் மிகவிரைவாக பலனளிக்கக்கூடிய பல ஆய்வுகளின் வழியே நிருபிக்கப்பட்ட ஒன்று.

மேலும் சில மரபார்ந்த யோக பள்ளிகளில் ஆழ்மனம் மற்றும் ஆன்மீக சாதனைகளையும் இணைத்து பயிற்சிகளை வடிவமைத்துள்ளனர். பொதுவாகவே நாற்பது ஐம்பது வயதுவரை நம்பிக்கையற்றவர்கள் கூட வாழ்வின் பிற்பகுதியில் இறைநம்பிக்கை அல்லது நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவதை நம்மால் பார்க்க முடியும். எனவே ஆசன பிராணாயாம பயிற்சிகளுக்கு இணையாகவே, கர்மயோகம், பக்தியோகம் ஞானயோகம், நாதயோகம் போன்ற யோகத்தின் உட்பிரிவுகளை முறையாக அறிமுகப்படுத்த இங்கே குருகுலங்களும் ஆசிரமங்களும் இருக்கின்றன. நீண்டகால அளவில் நிச்சயமாகவே பலனளிக்கக்கூடிய மாற்றுத் திட்டம் என்றே இவற்றை சொல்லவேண்டும்.

தேசம் முழுவதும் நூற்றுக்கணக்கான குருகுலங்கள் இருந்தாலும் நமக்கான ஒன்றை தேர்வு செய்வதும் அங்கே சென்று சிலவற்றை கற்றுக்கொள்வதும் சவாலான விஷயம் தான். ஒரு நல்ல ஆசிரியர் அதற்கு வழிகாட்ட முடியும். கற்றலுக்கு வயது ஒரு தடையில்லை என்பதால் இவ்வகை குருகுலங்களில் எளிதாக அதேவேளையில் வாழ்நாள் முழுமைக்கும் தேவையான ஒன்றை ஒருமாதம் தங்கி கற்றுக்கொண்டு பின்னர் வீட்டிலிருந்தே தொடங்கலாம்.

அப்படி ஒரு பயணத்திற்கோ, குரு குலத்திற்கோ சென்று பயில வாய்ப்பில்லாதவர்கள், உடல் மனம் உள்ளுறையும் ஆற்றல் இவற்றை மேம்படுத்த தேவையான பத்து முதல் பன்னிரண்டு பயிற்சிகளை மட்டுமாவது ஒரு மரபார்ந்த பள்ளியில் கற்று தேறும் பட்சத்தில், முதல் கட்ட பலனாக அன்றாட புலம்பல்கள் குறைவதை காணமுடியும். இளைஞர்கள் வயதானவர்களிடம் நெருங்கி வராததற்கு முதன்மை காரணம், முதியோரின் புலம்பல்கள் மட்டுமே, தன்னை சுற்றியிருக்கும் அனைத்தும் குறைபட்டது என்றோ சிலவற்றின் மீது மட்டும் அதீத பற்றை வைத்திருப்பதினாலுமே, பெரும்பாலான நேரங்களில் புலம்பல்களே மிஞ்சுகிறது.

வயதான ஒருவர் தன்னளவில், உடல் மன அமைப்பில் ஆரோக்கியத்தை அடைவாரெனில், அவருக்கு இங்கே குறைபட்டுக்கொள்ள எதுவும் இருக்காது. ஒருவகையில் அவர் வாழ்ந்து நிறைந்து கனிந்தவராகவே இருப்பார் அப்படி இருக்கும் முதியவர்களை சுற்றி எப்போதும் இளைஞர் கூட்டம் இருப்பதையும் நாம் மறுக்க முடியாது.

யோகம் அதை நல்கும்

இந்த பகுதியில் தியான நிலையில் நீண்ட நேரம் அமர்வதற்கும், மன ஒருநிலைப்பாட்டிற்கும் உகந்த அமரும் நிலையான ‘தியான வீராஸனம்’ எனும் பயிற்சியை தெரிந்து கொள்ளலாம். காலை நீட்டி அமர்ந்து முதலில் வலது காலை மடித்து இடது தொடைக்கு வெளிப்புறத்தில் உடம்பை ஒட்டியநிலையில் வைத்துக்கொண்டு இடது காலை அதே போல வலது புறம் வைத்து, கைகளை ஒன்றன்மீது ஒன்றாக வலது மூட்டின் மீது வைத்து அமர்ந்து நிதானமாக சுவாசத்தை எண்ணலாம்.

The post ங போல் வளை… யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Saffron ,Dr. ,Anava ,
× RELATED ங போல் வளை