×

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்: ஆகஸ்ட் 24ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக மாஜிஸ்திரேட் உத்தரவு

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ம் தேதி உரிய ஆதாரங்கள் இல்லாமல் திமுக முக்கிய பிரமுகர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். அப்போது திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக தலைவருமான டி.ஆர்.பாலுவின் சொத்துப்பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு என்மீது கூறு அவதூறு குற்றச்சாட்டுக்கு 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அண்ணாமலை மீது ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடருவேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் அண்ணாமலை மன்னிப்பு கேட்காததால், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உண்மைக்கு புறம்பாக சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை மீது, சைதாப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், நான் கடந்த 1957ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். எம்.பி.யாகவும், ஒன்றிய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். கட்சியிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்து வருகிறேன். எனக்கு சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரும் மரியாதையும் உள்ளது. அதை சீர்குலைக்கும் வகையிலும், களங்கம் ஏற்படுத்தும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக சுமத்தியுள்ளார்.

எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அவர், கூறும் நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் மட்டும் சிறு முதலீடு செய்து உள்ளேன். மற்ற நிறுவனங்களில் பங்குதாரராகவும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனுவில் கூறியிருந்தார்.

இந்த அவதூறு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை 14ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நோட்டீஸ் அனுப்பபட்டது. அதன்படி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று காலை 10.15 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அனிதா ஆனந்த் முன்பு ஆஜரானார்.

அப்போது மாஜிஸ்திரேட் இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு இந்த அவதூறு வழக்கில் விசாரணை வரும் ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கும் என்றும், அன்றைய தினத்தில் அண்ணாமலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதைதொடர்ந்து அண்ணாமலை நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார். முன்னதாக அண்ணாமலை நீதிமன்றத்திற்கு வரும் தகவல் அறிந்த பாஜக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சைதாப்பேட்டை நீதிமன்றம் முன்பு தங்களது கொடிகளுடன் குவிந்தனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்: ஆகஸ்ட் 24ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக மாஜிஸ்திரேட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Djagar Treasurer ,D. R.R. Palu ,Ajar ,Rajah ,Anamalai Saithapet ,Chennai ,Anamalai ,Rajar ,Anamalai Saitapet ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு...