×

உற்சவங்கள் பேசும் உயிரோவியங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

*காஞ்சிபுரம் – வரதராஜபெருமாள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாள் காலை மாலை என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்நிலையில், ஆயகலைகளுள் ஒன்றான ஓவியக்கலை உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குவதுடன், உணர்வுகளை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. காட்சிகள் ஓவியரின் கைவண்ணத்தில் புதிய வடிவத்தையும், துல்லியமான உணர்வையும் வெளிப்படுத்துகின்றன.

அதன்படி, காஞ்சிபுரத்தை அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஓவியரான பா.சங்கர் என்பவர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ நிகழ்வின்போது, வரதராஜ பெருமாள் கருட வாகனம், சிம்ம வாகனம், ஹம்ஸ வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, யாளி வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வரதராஜ பெருமாள் வீதி உலா வந்ததை புகைப்படங்களாக தினம் தோறும் காலை, மாலை என இருவேளையும் சேகரித்து, அடுத்த 2-3 மணி நேரத்தில் நீர் வண்ண ஓவியங்களாக மிக அழகாகவும், நுணுக்கமாகவும் வரைந்து அசத்தியுள்ளார்.

இதில் குறிப்பாக வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற திருத்தேர் உற்சவத்தை மிகச் சிறிய அளவிற்கு குறிப்பாக 1.5. செ.மீ. அளவில் நீர் வண்ண ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார்.இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதுகுறித்து ஓவியர் சங்கர் கூறுகையில், இந்த வெகு விமர்சையான புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தை ஆவணப்படமாக மேற்கொள்வதற்காக இந்த ஓவியங்களை வரைந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதை காட்சிப்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் மேலும் தன்னிடம் பயிற்சி பெற வரும் மாணவர்களுக்கு வரைந்த அனுபவத்தையும் அதன் நுணுக்கங்களையும் பயிற்றுவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த வகையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் என்றாலே சிறப்புதான்… முக்கிய திருவிழாவான வைகாசி பிரம்மோற்சவம் என்பது வையகத்தின் பக்தர்களை பரவசப்படுத்தும் வைபவமாக அது காலங்காலமாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உற்சவமும் பக்தர்களை பரவசப்படுத்தும் உற்சவங்களாக விளங்கி வருகிறது. அந்த உற்சவங்களை உயிரோவியமாக தீட்டி மீண்டும் பக்தர்களை பரவசப் படுத்தி இருக்கிறார்கள் பக்தர் (ஓவியர்) என்றால் அது மிகையாகாது.

தொகுப்பு: கே. சுதாகேசவன்

The post உற்சவங்கள் பேசும் உயிரோவியங்கள் appeared first on Dinakaran.

Tags : Kunkumum ,Spiritual ,Kanchipuram ,Vaigasi Brahmoarsavam ,Varadaraja ,Perumal Temple ,
× RELATED பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!