×

கண்டாச்சிபுரம், கெடார் பகுதிகளில் கனமழையால் சாலைகள் துண்டிப்பு

கண்டாச்சிபுரம், ஜூலை 14: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரே நாளில் திடீரென அதிகளவில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் அதிகளவில் மனம்பூண்டி பகுதியில் 27 செ.மீ, முகையூர் பகுதியில் 20 செ.மீட்டரும், சூரப்பட்டு பகுதியில் 21 செ.மீட்டர் அளவும் கனமழை பெய்துள்ளது. இதனால் கண்டாச்சிபுரம் தாலுகா கிராமங்கள் மற்றும் கெடார், அதன் சுற்றியுள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிகளவில் கனமழை பெய்து நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகளவு காணப்படுகிறது. குறிப்பாக மேல்வாலை, ஒடுவன்குப்பம், பில்ராம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பியும், கண்டாச்சிபுரத்தில் உள்ள 3 ஏரிகள் மற்றும் கெடார் பெரிய ஏரிகளில் பெரும்பாலும் நிரம்பும் நிலையிலும், தொடர்ந்து ஓடைகள் மூலம் ஏரிக்கு வருகின்ற நீர்வரத்து அதிகரித்தே காணப்படுகிறது. மேலும் காணை ஒன்றியத்தில் சூரப்பட்டு, ஆரியூர், மல்லிகைப்பட்டு உள்ளிட்ட ஒடைகளில் நேற்று காலை வெள்ளபெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கண்டாச்சிபுரம் அடுத்த ஒடுவன்குப்பம் ஏரிக்கு வரும் ஓடையில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதால் அதன் முழு கொள்ளளவு எட்டி நீர் நிரம்பியதை அடுத்து கண்டாச்சிபுரம்- ஒடுவன்குப்பம் செல்லும் சாலையில் கோடி வாய்க்கால் மூலம் தண்ணீர் வெளியானது. இதனால் கண்டாச்சிபுரம்- ஒடுவன்குப்பம் சாலையில் சுமார் 20 ஆண்டுகள் பழமையான சிறிய மரம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் ஒடுவன்குப்பம் கிராமத்தில் இருந்து கண்டாச்சிபுரத்திற்கு தினசரி அன்றாட தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் கண்டாச்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் என சுமார் 100 க்கும் மேற்பட்டோர் மேல்வாலை வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றி கண்டாச்சிபுரம் செல்லும் நிலை ஏற்பட்டது. ஒடுவன் குப்பம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் நிலத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை உடனடியாக சீரமைத்து தருமாறு ஒடுவன்குப்பம் கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

தகவல் அறிந்த தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கவுன்சிலரும், திமுக முகையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் பிரேம அல்போன்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், நாராயணன், ஒன்றிய குழு உறுப்பினர் குப்புசாமி மற்றும் ஏழுமலை ஆகியோர் சாலை துண்டிக்கப்பட்ட இடத்தை நேரடியாக பார்வையிட்டு சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கெடார் அரசு மருத்துவமனை அருகில் இருந்த மரமும், அரியலூர்- மாம்பழப்பட்டு சாலையில் மரமும் முறிந்து விழுந்தது.

இதனை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனைதொடர்ந்து கெடார்- சித்தாமூர் சாலையில் உள்ள வாய்காலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த கனமழையில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. அப்போது அந்த வாய்க்கால் அருகில் உள்ள கெடார் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது கோழிபண்ணையில் இருந்த 5 ஆயிரம் கறிகோழி குஞ்சுகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது. காணை ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் நெல் மற்றும் தானிய வகைகள் பயிரிட்ட விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனை மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கண்டாச்சிபுரம், கெடார் பகுதிகளில் கனமழையால் சாலைகள் துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Kandachipuram ,Kedar ,Vilappuram district ,Kandachhipura ,Dinakaran ,
× RELATED 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள்...