×

இலவச வேட்டி சேலைகளை திருடியதாக விஏஓ மீது பதியப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: இலவச வேட்டி சேலைகளை திருடியதாக விஏஓ மீது பதியப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆரக்குடியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அருள்ராஜ் என்பவர் இலவச வேட்டி சேலைகளை திருடி பதுக்கியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மனுவில் தேனி மாவட்டம் கழனிவாசல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறேன். அங்கு பல்வேறு நில ஆக்கிரமிப்பு, சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகளில் ஈடுபடுபவர்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்ததால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு பாதுகாப்பு கோரி காவல்துறையில் 2016ம் ஆண்டே மனு அளித்திருக்கிறேன்.

இதனால் என் உயர் அதிகாரிகளால் நான் பணியிடமாற்றம் செய்யப்பட்டேன். பணி மாற்றத்தை ரத்துசெய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்து பணியிட மாறுதலுக்கு தடை உத்தரவும் பெற்றுள்ளேன். இதனால் எனது உயர் அதிகாரிகள் என் மீது பல விதத்தில் பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கும் இலவச வெட்டி சேலைகளை வழங்காமல் வீட்டில் பதுக்கி வைத்ததாகவும், அதனை அதிகாரிகள் சோதனை செய்து பறிமுதல் செய்ததாகவும் என் மீது பொய்யான வழக்கு 2017ம் ஆண்டு பதியப்பட்டது.

இதனை தொடர்ந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டேன். இது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். எனவே இந்த வழக்கில் என் மீது பதியப்பட்ட வழக்கு மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவானது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சசிகுமார், சுகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் நேர்மையான பணியாளர் என்பதால் உயரதிகாரிகளால் பழிவாங்கப்படுகிறார். அரசு வழங்கும் இலவச வேட்டி சேலைகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பாக மாட்டார்.

இந்த வழக்கு முற்றிலும் பொய்யாக தொடரப்பட்ட வழக்கு என்று வாதிட்டார். தொடர்ந்து, இலவச வேட்டி சேலைகளை திருடியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் மனுதாரரின் வாதம் கவனிக்கத்தக்கது என்று கூறிய நீதிபதி, மனுதாரர் கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே. இலவச வேட்டி, சேலைகளை திருடி பதுக்கியதாக விஏஓ மீது மட்டுமே பொறுப்பு சுமத்த முடியாது. இலவச வெட்டி சேலைகளுக்கான பொறுப்பு என்பது சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரை உள்ளடக்கியதாகும் என்று கருத்து தெரிவித்தார். மேலும், இலவச வேட்டி சேலைகளை திருடியதாக விஏஓ மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக கூறி வழக்கை முடித்து வைத்தார்.

The post இலவச வேட்டி சேலைகளை திருடியதாக விஏஓ மீது பதியப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை..!! appeared first on Dinakaran.

Tags : iCourt Branch ,VAO ,Madurai ,High Court ,iCort Branch ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!