×

கஞ்சா கடத்தலை தடுக்க கேரளா செல்லும் ரயில்களில் கண்காணிப்பு

சேலம், ஜூலை 13: கஞ்சா கடத்தலை தடுக்க கேரளா செல்லும் ரயில்களில், ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க ‘‘ஆபரேஷன் 4.0 கஞ்சா வேட்டை’’ சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையில், கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மாநிலம் முழுவதும் போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த கஞ்சா வழக்கில் கைதானவர்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட சொத்துக்களை முடக்கி வைக்கவும், அடுத்து அவர்கள் இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதன்பேரில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கஞ்சா வழக்கில் கைதானவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களின் வங்கி கணக்குகளை முடக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ரயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், தன்பாத் எக்ஸ்பிரஸ் கேரளா செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தி வரும் வாலிபர்களை கைது செய்தும், அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 6மாதத்தில் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில்களில் ரயில்வே போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டுள்ளது. இந்த கஞ்சாவை கடத்தி வந்த 6 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். தன்பாத், சாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் கேரளா வரை செல்வதால், கஞ்சா வியாபாரிகள், ஆந்திராவில் உள்ள புரோக்கர்களுக்கு ஆன்லைனில் பணம் அனுப்பி கஞ்சாவை கடத்தி வந்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த விவரங்களை கொண்டு, தொடர்புடையே மேலும் சில நபர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘‘சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், ேஜாலார்பேட்டை, காட்பாடி, தர்மபுரி, ஓசூர், சேலம் வழியாக செல்லும் ரயில்களில் நடத்திய சோதனையில் 60 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டறிந்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’’ என்றனர்.

The post கஞ்சா கடத்தலை தடுக்க கேரளா செல்லும் ரயில்களில் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Salem ,Dinakaran ,
× RELATED ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை