×

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி நியோ மேக்ஸ் நிதி நிறுவன கிளை இயக்குநர்கள் கைது

மதுரை: பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி செய்த நியோ மேக்ஸ் நிதி நிறுவன இயக்குநர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக தருவதாகவும், மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் விளம்பரம் செய்தது. இதனை உண்மை என நம்பி பலர், பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர். ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடி செய்துவிட்டது.

ஏமாந்த முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதன்படி நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர் வீரசக்தி உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 17 கிளை நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு, அங்கிருந்த நகைகள், விலை உயர்ந்த கார்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மோசடி நபர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின், திருநெல்வேலி கிளை இயக்குநர்களான சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சார்ந்த சைமன் ராஜா மற்றும் கபில் ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் இவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி நியோ மேக்ஸ் நிதி நிறுவன கிளை இயக்குநர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Neo Max financial company ,Madurai ,Neo Max Finance Company ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை