* சிறப்பு செய்தி
கூவம் முகத்துவாரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி 40% முடிவடைந்துள்ளது. இந்நிலையில் ஜனவரி மாதத்திற்குள் முழுப்பணிகளும் முடிவடையும் வகையில் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கேசவரம் என்ற கிராமத்தில் கல்லாற்றின் கிளையாக கூவம் ஆறு உற்பத்தியாகிறது. இது சென்னை நகரில் மட்டும் 20 கிலோ மீட்டர் துாரம் பயணிக்கிறது. ஒரு காலத்தில் கூவம் ஆறு குடிநீருக்காகவும், விவசாய பாசனத்துக்கும், சிறு படகு வியாபாரிகளின் வர்த்தகத்துக்கும் பயன்பட்டது. கிராமங்களில் விளையும் காய்கறிகளை நதிநீர் வழியே சிறு படகுகளில் கொண்டு வந்து சென்னை போன்ற பகுதிகளில் விற்பனையும் நடந்து வந்துள்ளது.
நாளடைவில் நகரமயமாதல் காரணமாக ஏற்பட்ட கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்பட்டதாலும், குப்பை போன்ற திடக்கழிவுகள் கொட்டப்பட்டதாலும் கூவம் பெரிதும் மாசடைந்தது. “சென்னை மெரினாவில் நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆறு வங்கக் கடலில் கலக்கிறது. அதன் முகத்துவாரம் கடல் மணலால் தூர்ந்து போய் உள்ளது. இதனால், கடல் அலைகள் கூவம் ஆற்றில் நுழைவது தடைபடுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கடல் அரிப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. கடல் அலை கூவம் ஆற்றுக்குள் புகுந்து செல்லாததால், கூவம் ஆற்றில் உள்ள கழிவுநீர் ஒரே இடத்தில் நிலையாக தேங்கி, கொசு உற்பத்தி செய்யும் மையமாக மாறிவிட்டுள்ளது.
அந்த கழிவுநீரில் கொசுக்கள், புழுக்களை தவிர கடல் நீர்வாழ் உயிரினங்களான மீன், நண்டு, ஆமைகள் வாழ முடியாது. இதனால், கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் உயிர்ச் சங்கிலி உடைபட்டு சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உள்பட பல அந்நிய நாடுகளில் பால் சுறாக்கள் முதல் ஆமைகள் வரை அந்நாட்டின் கடற்கரை பகுதிக்கு வந்து மக்களை குஷிப்படுத்தி செல்கிறது. இதற்கு காரணம், கடற்கரை சுற்றுச்சுசூழலை அந்நாடு கடுமையான சட்டவிதிகளை பின்பற்றி பாதுகாக்கிறது.
ஆனால், அரசு ஆயிரம் சட்டம் போட்டாலும் அவற்றை குப்பையில் தூக்கி போட்டுவிட்டு ஆறுகளை, கடற்கரை பகுதிகளை நச்சுப்படுத்தும் பணியில் ஒரு சிலர் தன்னை அறியாமலேயே ஈடுபடுகின்றனர். அதேபோன்ற ஒரு ஆறுதான் பக்கிங்காம் என்பது இந்த நேரத்தில் நினைவுகூரத்தக்கது. இந்த நிலையைப் போக்கி, சென்னையை சுகாதாரமான பகுதியாக மாற்ற பல்வேறு முயற்சிகள் பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்டது. ஆனால், அவை எல்லாமே மக்களின் கூட்டு முயற்சி இல்லாத காரணத்தால் கை கூடவில்லை.
தற்போது தான், சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, அதன்மூலம் கூவம் நதி, அடையாறு உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக வெள்ளம் ஏற்படும் போதும், நீரோட்டம் அதிகரிக்கும் போது முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் உருவாவது, வெள்ள நீர் வெளியேறுவதற்கு ஏற்படும் தடை மற்றும் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.70 கோடியில் கூவம் முகத்துவாரத்தில் தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது: கூவம் முகத்துவாரத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் கட்டும் பணி 40% முடிந்துள்ளது. இந்த தடுப்பு சுவர் மூலம் ஆற்றில் வரும் நீர் நேரடியாக கடலில் கலக்கும் முகத்துவாரம் நிரந்தரமாக திறக்கப்படும். இதற்காக முகத்துவாரங்களில் உள்ள கற்கள் அகற்றப்படும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பாறாங்கற்கள் மற்றும் பிரத்யேக தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது 4 முதல் 8 டன் எடையுள்ள கான்கிரிட் ெடட்ராபோட்களின் கலவையை பாறாங்கற்களின் மேல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பருவமழையின் போது கற்பாறைகள் இடம் பெயர்வது தடுக்கப்படும். அதேபோல் ஆழமான பகுதியில் 8 மீட்டர் உயரத்தில் இந்த தடுப்பு அமைக்கப்படுவதால் வெள்ள நீரை வெளியேற்றப்படும். அலை வேகம் கட்டுப்படுத்தப்படும்.
கடல் அரிப்பும் தடுக்கப்படும் இதனிடையே முகத்துவாரங்களில் படியும் வண்டல் மண் படிமங்களை அகற்றுவதற்கான ஆற்றுப்படுகையை தூர்வாரி வருகின்றனர். இதுவரை ஒரு லட்சம் கன மீட்டர் அளவுக்கு மணல் அகற்றப்பட்டுள்ளது. மேலும் 75,000 கன மீட்டர் இன்னும் சில மாதங்களில் அகற்றப்படும். ஆற்றில் இருந்து அகற்றப்படும் மணல், சீனிவாசபுரம், அக்கரை மற்றும் வடசென்னை ஆகிய பகுதிகளில் கடற்கரை ஊட்டச்சத்து பணிகளுக்காக கொண்டு செல்லப்படுகிறது. இப்பணி ஜனவரி மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆழமான பகுதியில் 8 மீட்டர் உயரத்தில் இந்த தடுப்பு அமைக்கப்படுவதால் வெள்ள நீரை வெளியேற்றப்படும். அலை வேகம் கட்டுப்படுத்தப்படும். கடல் அரிப்பும் தடுக்கப்படும்.
* கொசு இல்லாத சென்னையை உருவாக்கலாம்
கூவம் முகத்துவாரம் அடைபட்டு கிடப்பதால், மழை காலங்களில் மழைநீர் கடலுக்கு செல்லாமல் கரையோர பகுதிகளில் வெள்ள பாதிப்பு, மண் அரிப்பு போன்ற பல வகையான தீமைகள் ஏற்படுகின்றன. மேலும், கூவம் ஆறு மாசுபட்டதால் அந்த கழிவுநீரில் தேங்கும் கொசுக்கள் மூலம் ஆரோக்கியமான சமுதாயமான சென்னை மக்கள் கொசு கடிகளால் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி நோயாளிகளாக மாற்றிவிடுகிறது. இது ஒரு நோயாளியின் உடல் நலத்தோடு நிற்பதில்லை. அவரின் குடும்பத்தையும் பொருளாதார சிக்கலில் மாட்டிவிட்டு, பழைய நிலைக்கு மீண்டு வர முடியாத அளவுக்கு அவர்களின் பொருளாதார சூழலை தலைகீழாக மாற்றி விடுகிறது. ஆக கூவம் முகத்துவாரம் சுத்தமானால் ஆரோக்கியமான, கொசு இல்லாத சென்னையை விரைவில் எதிர்பார்க்கலாம்.
* 4,500 டெட்ரோபாட்கள் என்ன செய்யும்?
கூவம் ஆறு வினாடிக்கு 25,000 முதல் 30,000 கனஅடி தண்ணீர் கடத்தும் திறன் கொண்டுள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்துக்கு முன்னதாக ஆற்றின் மேல் பகுதியில் நீர் புகுந்துவிடாமல் தடுக்க கனரக இயந்திரங்கள் மூலம் மணல் திட்டுகளை அகற்ற வேண்டியிருந்தது. இந்த தடுப்பு சுவர்கள் மொத்த தூரமான 310 மீட்டரில் 260 மீட்டர் நீளத்துக்கு தெற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் 210 மீட்டர் என மொத்தம் 4,500 டெட்ரோபாட்கள் வைக்கப்படுகிறது. அதேபோல் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வழங்கிய வடிவமைப்பின் அடிப்படையிலேயே அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
The post கூவம் முகத்துவாரத்தில் சுறுசுறுப்பாக நடக்கும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி ஜனவரியில் முடியும்: தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரி தகவல் appeared first on Dinakaran.
