×

பயிரை விஷமாக்கும் ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்கு குட்பை இயற்கை வழி பாரம்பரியத்திற்கு மாறும் வேளாண்மை

*செலவினங்கள் கம்மி, மகசூல் ஜாஸ்தி

*மகிழ்ச்சியில் விவசாயிகள்

மதுரை : மதுரை மாவட்ட விவசாயிகள் செயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகளை தவிர்த்து, இயற்கை வழி பாரம்பரிய பூச்சிக்கொல்லிகளுக்கு மாறி வருகின்றனர். ரசாயன பூச்சி மருந்துகளின் பாதிப்பிலிருந்து இயற்கையான முறையிலான இந்த பூச்சிக்கொல்லி தயாரிப்புக்கு மாறி, விவசாயம் செய்து வருகின்றனர். இது செலவினங்களை குறைத்து இரு மடங்கு மகசூல் வழங்கி வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது உணவு. அதனை நம் முன்னோர்கள் ‘உணவே மருந்து’ என்ற முறையில் உட்கொண்டனர். ஆனால் இன்று நஞ்சில்லா உணவே நமது முதல் தேவையாக உள்ளது. அதிக மகசூல் பெற நம் உணவு பயிர்களை தாக்கும் பல விதமான பூச்சிகளைக் கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதனால் பயிர்களில் விளையும் காய்கறிகள் நச்சுதன்மையாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனால் தற்போது விவசாயிகள் இயற்கை வழிமுறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த வேளாண்துறை அறிவுறுத்தி வருகிறது.

அவற்றை பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெறலாம். மதுரை மாவட்டத்தில் விவசாயிகளில் ஒரு பகுதியினர் இவ்வகை இயற்கை வழி பாரம்பரிய விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். இயற்கை உரங்களை பயன்படுத்துவதில் கூடுதல் அக்கறை காட்டி வரும் இவர்கள், தற்போது பூச்சிவிரட்டிகள், பூச்சிக்கொல்லிகள் என இயற்கை வழிக்கு மாற்றம் கண்டு வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு அரசின் வேளாண்துறையினரும் பலதரப்பட்ட வழிமுறைகளை விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

மதுரை விதைப்பரிசோதனை அதிகாரி மகாலட்சுமி, வேளாண் அதிகாரி கமலாராணி மற்றும் ராமலெட்சுமி ஆகியோர் கூறியதாவது: பலதரப்பட்ட இயற்கை வழி பூச்சிக்கொல்லிகளை தாங்களே விவசாயிகள் தயாரி்தது வழங்கிட பலதரப்பட்ட பயிற்சிகளை வழங்கி, வழிகாட்டி வருகிறோம். வேப்ப இலை சாறு: 5 கிலோ வேப்ப இலையை நன்றாக அரைத்து 6 விட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். இக்கலவையை நன்கு கொதிக்க வைத்து, இக்கலவையுடன் 150 கிராம் காதி சோப்பு தூள் சேர்த்து மற்றும் 60 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம்.

*நொச்சி இலை சாறு: நொச்சி இலைகளை பறித்து, சுத்தம் செய்து நன்கு அரைக்க வேண்டும். இவற்றை நல்ல சுத்தமாக, வடிகட்டிய 3 லிட்டர் மாட்டு சிறுநீருடன் ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறு நாள் காலையில் இந்த ஊறிய கலவையை நன்றாக கலக்கி 70-80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 3 முதல் 4 மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். இக்கலவையை மிகவும் அடர்திரவமாக இருந்தால் அவற்றுடன் காய்ச்சி வடிகட்டிய சுத்தமான தண்ணீரை சேர்த்து ஒரு துணியால் வடிகட்டி அவற்றை ஒரு நாள் இரவு முழுவதும் குளிர்விக்க வேண்டும். 150 கிராம் அளவு சோப்புத்தூளை 250 மிலி தண்ணீருடன் கலந்து இக்கலவையுடன் சேர்க்க வேண்டும். இந்த இறுதி கலவையில் 50 மிலி கலவையுடன் 1 லி தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.

*எருக்கு இலை சாறு: 1 கிலோ எருக்கு இலையை அவற்றின் பாலுடன் சேகரித்து, அவற்றை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின்பு அவற்றை நறுக்கி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இக்கலவையை 50 லிட்டர் நீருடன் கலந்து வடிகட்டி தெளிக்கலாம்.

*காட்டாமணக்கு தாவர இலை சாறு: சுத்தமான காட்டாமணக்கு தாவர இலை மற்றும் தண்டை சுத்தமான நீருடன் சேர்த்து, நன்கு அரைக்க வேண்டும். இந்த எண்ணெய் பசையுடன் கூடிய 5 கிலோ காட்டாமணக்கு சாறு கலவையை 5லி மாட்டு சிறுநீருடன் ஒரு நாள் இரவு முழுவதும் வைக்க வேண்டும். இவற்றுடன் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். அவற்றை ஒரு காடா துணியின் மூலம் வடிகட்டி தெளிக்கலாம்.

*வேப்பங் கொட்டைச் சாறு: வேப்பங் கொட்டைகளை சேகரித்து, சுத்தமான நீரில் சுத்தம் செய்து நிழலில் சில நாட்கள் உலர வைக்க வேண்டும். இக்கொட்டையின் வெளி தோல் உடைத்து, கொட்டையின் உள் பகுதியை சேகரித்து நன்கு அரைத்து பசை போல் தயாரித்து கொள்ள வேண்டும். அதை 200 லிட்டர் நீருடன் கலக்கவும், மேலும் இக்கலவையுடன் 150 மிலி சோப்பு தூள் நீர் கலந்து ஒரு நாள் இரவு முழுவதும் வைக்க வேண்டும். மறுநாள் காலையில் இதை வடிகட்டி தெளிக்கலாம்.

*மலைவேம்பு கொட்டை நீர்மக் கரைசல்: மலைவேம்பு கொட்டையை நீரில் ஊறவைத்து பின்னர் அரை மணி நேரம் கொதிக்க வைத்து 24 மணி நேரம் வைக்க வேண்டும். 1 லிட்டர் மாட்டுச் சிறுநீருடன் 150 கிராம் சோப்பு தூள் சேர்த்து கலக்கி அவற்றை வடிகட்டி, மலைவேம்பு கொட்டை நீர்மக் கரைசலுடன் கலந்து சேர்த்து தெளிக்கலாம்.

விவசாயிகள் தங்கள் தேவைகேற்ப பாரம்பரிய முறையில் பூச்சி கொல்லிகளை தயாரித்து நஞ்சில்லா உணவு உற்பத்திக்கு வழிவகை செய்யலாம். மேலும் வேளாண்மை உற்பத்திக்கு முதன்மையானது நல்ல தரமான விதைகள். விதைகளை விதைப்பதற்கு முன் அதன் தரத்ததை பரிசோதிப்பது மிக அவசியம். எனவே, விவசாயிகள் தங்களிடமுள்ள விதைகளை மதுரை, விதைப்பரிசோதனை நிலையத்தில் விதை மாதிரி ஒன்றுக்கு ரூ.80 செலுத்தி பரிசோதனை செய்யலாம். இயற்கை வழி பாரம்பரிய பூச்சிக்கொல்லி தயாரிப்பு பயிற்சிகளுக்கும், கூடுதல் விபரங்கள் பெறவும் 0452-5248773 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post பயிரை விஷமாக்கும் ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்கு குட்பை இயற்கை வழி பாரம்பரியத்திற்கு மாறும் வேளாண்மை appeared first on Dinakaran.

Tags : Kammi ,Yield ,Madurai ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...