×

கோயம்பேட்டுக்கு வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.200க்கு எகிறியது: * பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

சென்னை: வரத்து குறைவு காரணமாக, கோயம்பேட்டில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.200க்கு எகிறியது. கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை ரூ.100ல் இருந்து ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தக்காளியின் விலையை விட சின்னவெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.200க்கு விற்பனையானது. சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.170க்கும், சின்ன வெங்காயம் ரூ.230க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மற்ற காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது.

இதன்படி, கேரட் ரூ.55க்கும் பீன்ஸ் ரூ.80க்கும் பீட்ரூட் ரூ.40க்கும், சவ்சவ் ரூ.25க்கும், முள்ளங்கி ரூ.30க்கும், முட்டைகோஸ் ரூ.20க்கும் வெண்டைக்காய், கத்தரிக்காய் ரூ.35க்கும், காராமணி, பாகற்காய் ரூ.50க்கும், புடலங்காய் ரூ.30க்கும், சுரக்காய் ரூ.30க்கும் சேனைக்கிழங்கு ரூ.45க்கும், முருங்கைக்காய் ரூ.40க்கும், சேனைகிழங்கு, காலிபிளவர் ரூ.35க்கும், பட்டாணி ரூ.200க்கும், இஞ்சி ரூ.260க்கும், அவரைக்காய் ரூ.50க்கும், பீர்க்கங்காய் ரூ.40க்கும், நூக்கல் ரூ.55க்கும், எலுமிச்சை பழம் ரூ.35க்கும், கோவைக்காய் ரூ.30க்கும், கொத்தவரங்காய் ரூ.30க்கும், வண்ண குடமிளகாய் ரூ.180க்கும், பச்சை மிளகாய் ரூ.70க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ். முத்துகுமார் கூறும்போது, ‘‘100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி வரத்து குறைவால் 140க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் தக்காளியின் விலையை விட சின்ன வெங்காயத்தின் விலை ரூ.200 ஆக உள்ளது. இஞ்சி ரூ.260க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலையை குறைக்க, தமிழக அரசு வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி, சின்ன வெங்காயம் வாங்க ஏற்பாடு செய்தால் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை குறையும்’’ என்றார்.

* பூக்களின் விலை சரிவு
கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு ஒசூர், திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து பூக்கள் வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.500க்கும், ஐஸ் மல்லி, முல்லை, ஜாதிமல்லி ரூ.400க்கும், கனகாம்பரம் ரூ.600க்கும், அரளி பூ ரூ.200க்கும், சாமந்தி ரூ.240க்கும், சம்பங்கி, பன்னீர்ரோஸ் ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.400க்கும் ஐஸ் மல்லி, முல்லை, ஜாதிமல்லி ரூ.300க்கும், கனகாம்பரம் ரூ.400க்கும், சாமந்தி ரூ.160க்கும், சம்பங்கி ரூ.50க்கும், பன்னீர்ரோஸ் ரூ.70க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.80க்கும், அரளி பூ ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுபற்றி, கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘‘ஒசூர் மற்றும் பிற மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அனைத்து பூக்களின் விலை குறைந்துள்ளது. ஆடி மாதம், அமாவாசை விசேஷ நாட்கள் வரவுள்ள நிலையில் மீண்டும் பூக்களின் விலை உயரும்’’ என்றார்.

The post கோயம்பேட்டுக்கு வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.200க்கு எகிறியது: * பொதுமக்கள் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Coimpet ,Chennai ,Coimbade Market ,
× RELATED பாவூர்சத்திரத்தில் பிறந்தநாள்...