×

பாவூர்சத்திரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் சாப்பிட்ட இரு சிறுமிகள் வாந்தி, மயக்கம்

*புழுக்கள் இருந்ததால் பரபரப்பு

பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் பிறந்தநாளையொட்டி பேக்கரியில் கேக் வாங்கி சாப்பிட்ட இரு சிறுமிகள் வாந்தி எடுத்து மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பாவூர்சத்திரம் அருகேயுள்ள சிவநாடனூரைச் சேர்ந்தவர் மோகன் (40). இவர் சென்னை கோயம்பேட்டில் பழக்கடை வைத்துள்ளார்.

இவருக்கு ஜெயா என்ற மனைவியும், ஸ்ரீரச்சனா (14), நிஷா (13) ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இவரது முதல் மகள் ஸ்ரீரச்சனாவுக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் மோகன் பாவூர்சத்திரம் பஸ்நிலையம் எதிரேயுள்ள பேக்கரியில் கேக் வாங்கி கொடுத்துவிட்டு அன்றே அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

நேற்று காலை ஜெயா மற்றும் மகள்கள் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடினர். அதை சிறுமிகள் இருவரும் சாப்பிட்டு பிறகு பள்ளிக்கு சென்றுவிட்டனர். அங்கு சிறிது நேரத்தில் சிறுமிகள் இருவரும் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஜெயா பள்ளிக்கு விரைந்து சென்று மகள்கள் இருவரையும் சிகிச்சைக்காக பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள் கெட்டுப்போன கேக்கை சாப்பிட்டதால் மயக்கமடைந்ததாக தெரிவித்துள்ளனனர்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று இரு சிறுமிகளும் வீடு திரும்பினர்.வீட்டிற்கு வந்ததும் ஜெயா கேக் முழுவதையும் வெட்டி பார்த்தபோது, அந்த கேக் கெட்டுபோய் உள்ளே புழுக்கள் இருந்தது தெரியவந்தது. உடனே ஜெயா, கணவர் மோகனுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார்.புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பேக்கரிக்கு வந்து சோதனையிட்டு கெட்டுப்போன கேக்களை பினாயில் ஊற்றி அழித்தனர். பின்னர் பேக்கரிக்கு அபராதம் விதித்தனர்.

அதிகாரிகள் கண்துடைப்பு நாடகம்

சிறுமிகள் கெட்டுப்போன கேக்கை சாப்பிட்டு மயக்கமடைந்தனர். தகவலறிந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.ஆனால் அவர்கள் சம்பந்தப்பட்ட பேக்கரியில் கண்துடைப்பாக ஆய்வு நடத்தி சென்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இவ்வாறு ஆய்வு மேற்கொண்டால் தொடர்ந்து இதுபோல் சுகாதாரமற்ற முறையில் பண்டங்களை தயாரித்து விற்பனை செய்வார்கள் என்றனர். எனவே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரி, சுவீட் கடையில் அடிக்கடி சோதனை செய்து தினசரி தேவையான அளவிற்கு உணவை தயார் செய்ய அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post பாவூர்சத்திரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் சாப்பிட்ட இரு சிறுமிகள் வாந்தி, மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Pavurchathra ,Pawoorsatram ,Mohan ,Sivanathanur ,Pavursatram ,Coimpet, Chennai ,
× RELATED ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி,...