×

ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு ஆக. 2 முதல் விசாரணை உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான வழக்கு வரும் ஆக. 2 முதல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்படும் என்றும், ஆவணங்களை தொகுக்க நோடல் ஆலோசகர்கள் நியமனம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி, ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ஒன்றிய அரசு நீக்கியது. இந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து 23 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கௌல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், இவ்வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்கியுள்ளது. இவ்வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினமும் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இவ்வழக்கின் ஆவணங்களை தொகுக்கும் வகையில், இரண்டு வழக்கறிஞர்களை நோடல் ஆலோசகர்களாக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

எழுத்துப்பூர்வமான மனுக்களை வரும் 27ம் தேதி அல்லது அதற்கு முன் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கு பின் தாக்கல் செய்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட வழக்கை தாக்கல் செய்தவர்களில் மிக முக்கியமானவர்களாக கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல், சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத் ஆகியோர், இவ்வழக்கை தொடர விரும்பவில்லை என்று கோரிக்கை வைத்ததால், நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

The post ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு ஆக. 2 முதல் விசாரணை உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jammu ,-Kashmir ,Supreme Court ,New Delhi ,Jammu and Kashmir ,Jammu-Kashmir ,Dinakaran ,
× RELATED காஷ்மீரில் 3 தொகுதிகளில் பாஜ போட்டி...