×

15 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை கூடங்குளத்தில் பெண்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

கூடங்குளம்: கூடங்குளத்தில் 15 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 45 நிமிடம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கூடங்குளம் கிராம பஞ்சாயத்து. இங்கு சுமார் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கூடங்குளம் அணுமின்நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கூடங்குளம் கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட 2வது வார்டில் வடக்கு காமராஜர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி ரோடு ஆகிய பகுதிகள் உள்ளன. இதில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதுகுறித்து கூடங்குளம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து இன்று காலை 7.45 மணி அளவில் வடக்கு காமராஜர் நகர் பகுதியில் கூடங்குளம்- ராதாபுரம் மெயின் ரோட்டில் சுமார் 50 பெண்கள் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். வேண்டும், வேண்டும், குடி தண்ணீர் வேண்டும், சப்ளை செய், சப்ளை செய், அத்தியாவசிய குடிநீரை ஒழுங்காக சப்ளை செய் என்று கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்த கூடங்குளம் கிராம பஞ்சாயத்து தலைவர் வின்சி மணியரசு, எஸ்ஐ வினுகுமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 4 நாட்களுக்குள் குடிநீரை வழங்குவோம் என்று பஞ்., தலைவர் வின்சி மணியரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியல் போராட்டத்தை பெண்கள் வாபஸ் பெற்று, கலைந்து சென்றனர். சுமார் 45 நிமிடங்கள் நடந்த மறியலால் வள்ளியூர்- கூடங்குளம் சாலை போக்குவரத்தும், கூடங்குளம்- நெல்லை சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டில் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன. மறியல் வாபசானதைத் தொடர்நது மீண்டும் இந்த இரு ரோடுகளிலும் போக்குவரத்து சீரானது.

The post 15 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை கூடங்குளத்தில் பெண்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Women's strike ,Kudankulam ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?