×

தக்காளி வரத்து 1 டன்னாக சரிவு

 

தர்மபுரி: பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில், தக்காளி வரத்து ஒரு டன்னாக குறைந்துள்ளது. அங்கு கொள்முதல் விலை கிலோ ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் இருமத்தூர், கம்பைநல்லூர், பென்னாகரம், அதகப்பாடி, மொரப்பூர், அரூர் உள்ளிட்ட இடங்களில் தக்காளி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. பாலக்கோடு, காரிமங்கலம் ஜிட்டாண்டஅள்ளி, கம்பைநல்லூர், அரூர், மொரப்பூர் தக்காளி மண்டிகளுக்கு தினசரி சுமார் 100 டன் தக்காளி விற்பனைக்கு வருகிறது. கேரளா, கர்நாடகா மற்றும் சென்னை, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். கோடைக்காலத்தில், தக்காளி விளைச்சல் அதிகரிப்பால், மண்டி மற்றும் சந்தைகளுக்கு வரத்து அதிகரித்து, விலை குறையும். கடந்த ஒருமாதத்திற்கு முன், விலை கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால், வாங்குவதற்கு ஆள் இல்லாமல், செடியிலேயே தக்காளி பழுத்து அழுகியது. இதனால் சாலையோரத்தில் விவசாயிகள் கொட்டி விட்டு சென்றனர். இந்த நிலையில், கடந்த மாதத்தில் கடும் வெயில் மற்றும் வெப்பக்காற்று வீசியதால் தக்காளி செடிகள் கருகின.

அதேபோல், கோடையில் ஆலங்கட்டி மழை பெய்ததாலும், தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது கடந்த ஒருமாதமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளி வரத்து சரிந்து, விலை உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி, வெளிமார்க்கெட்டில் ரூ.120வரை விற்பனை செய்யப்படுகிறது. உழவர் சந்தைகளில் அதிகபட்சமாக கிலோ ரூ.98 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒருவாரமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், விளைநிலங்களில் மண் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளி செடிகளில் பூ பூத்து, காய் பிடித்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பழைய தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி விளைச்சல் முழுமையாக முடிந்தது. கரூர், திருச்சி, சேலம் மற்றும் கேரளா வியாபாரிகள் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு தக்காளி வாங்க வருகின்றனர். ஆனால் தற்போது அனைத்து வியாபாரிகளுக்கும் எதிர்பார்க்கும் அளவுக்கு தக்காளி கிடைப்பதில்லை. குறைந்த அளவு தக்காளியே வாங்கி செல்கின்றனர். தற்போது புதிய தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடியில் பூ பூத்து, காய் பிடித்துள்ள நிலையில் தக்காளி விளைச்சல் அதிகரிக்கும், சந்தைக்கு வரத்தும் அதிகரிக்கும்.

அதன்பின் தக்காளி விலை தானாக குறையும்,’ என்றனர். இதுகுறித்து பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அதிகாரிகள் கூறுகையில், ‘பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில், இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு தக்காளி விற்பனைக்கு செல்கிறது. மேலும், கேரளா, கர்நாடகா மாநிலத்திற்கும் தக்காளி செல்கிறது. பாலக்கோடு மார்க்கெட்டிற்கு வழக்கமாக 5 டன் முதல் 7 டன் வரை தக்காளி வரத்து இருக்கும். ஆனால், விளைச்சல் பாதிப்பால் தற்போது ஒரு டன் முதல் ஒன்றரை டன் வரை மட்டுமே வருகிறது. நேற்று கொள்முதல் விலையாக ஒரு கிலோ ரூ.75 முதல் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. 15 கிலோ கொண்ட தக்காளி கூடை ரூ.1125க்கும், 27 கிலோ கொண்ட தக்காளி கூடை ரூ.2025க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்னும் இருவாரத்தில் தக்காளி விலை குறையும்,’ என்றனர்.

The post தக்காளி வரத்து 1 டன்னாக சரிவு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Palakode ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்