×

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த வேளாண் வணிக திருவிழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்ற வேளாண் வணிகத் திருவிழாவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அனைத்து தரப்பினரும் ஆர்வமாக கண்காட்சியை பார்வையிட்டனர். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வணிக ரீதியாக லாபகரமாக இயங்குவதற்கு, தமிழ்நாடு அரசு பயிற்சியும், நிதிஉதவியும் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வேளாண் வணிகத் திருவிழா-2023 சென்னை வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதல்வர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

ஜூலை 8, 9 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த கண்காட்சியை விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர். இந்த வேளாண் வணிகத் திருவிழாவில் 176 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 86 அரங்குகளில் 188 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருட்களும், 90 அரங்குகளில் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், நபார்டு வங்கி, தொழில் முனைவோர்கள், பிற மாநிலங்களில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், வங்கிகள் போன்ற பல்வேறு அமைப்புகள் சார்ந்த கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான மக்கள் கண்காட்சியை பார்வையிட குவிந்தனர். மேலும் இந்த அரங்குகளில் சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், பனை சார்ந்த பொருட்கள், நறுமணப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பூக்கள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய விளைபொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன. இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதில் சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டப்பட்ட தின்பண்டங்கள், உடனடியாக சமைக்கும் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்ட அரங்குகள் குழந்தைகள், பெண்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

The post சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த வேளாண் வணிக திருவிழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Agribusiness Festival ,Nantambakkam, Chennai ,CHENNAI ,
× RELATED உலகின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை...