×

சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரை தூண்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியது: மெட்ரோ ரயில் அதிகாரி தகவல்

சென்னை, ஜூலை 9: சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரை தூண்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது என மெட்ரோ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம், 3 வழித்தடத்தில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகிறது. இந்தப் பணிகளை 2026ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2ம் கட்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகள் வேகமெடுத்து நடைபெற்று வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. அதன்படி மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலான வழித்தடத்தில் திட்டத்திற்கு தேவையான நிலத்தை மெட்ரோ நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது என தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரி கூறுகையில், ‘‘மெட்ரோ ரயில் திட்டம் வரும் காலங்களில் பணிகள் தாமதமாகாமல் இருக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் 2027ம் ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். முதல் கட்டமாக பூந்தமல்லி முதல் போரூர் வரையிலும், மாதவரம் முதல் ரெட்டேரி உள்ளிட்ட பகுதிகள் பணிகள் முடிக்கப்பட்டு 2026ம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இதனிடையே, சோழிங்கநல்லூரில் இருந்து சிப்காட் வரையிலான பழைய மாமல்லபுரம் சாலையில் தூண்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. அதில், நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் மற்றும் சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரை என 2 தனித்தனி ஒப்பந்தங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நேருநகர் முதல் சிப்காட் வரையிலான பகுதியில் 19 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நேரு நகர் மற்றும் சோழிங்கநல்லூர் இடையேயான பணிகள் நீண்ட நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இருப்பினும் சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் இடையேயான பாதைக்கான பணிகள் சில வாரங்களுக்கு முன்பே தொடங்கியுள்ளது. ஆதம்பாக்கம்-ஆலந்தூர் மற்றும் போரூர்-பவர் ஹவுஸ் போன்ற வழித்தடங்களில் எதிர்கொள்ளப்பட்ட சவால்கள் ஓஎம்ஆர் சாலையில் இல்லை. ஆரம்ப கட்டத்தில் திட்டத்தின் வடிவமைப்பு மாற்றங்கள் இருந்தன. அதனால்தான் ஒப்பந்தத்தை வழங்குவதற்கும் பணியைத் தொடங்குவதற்கும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்துவிட்டதால் 3 ஆண்டுகளில் பணிகள் முடிவடையும்,’’ என்றார்.

The post சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரை தூண்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியது: மெட்ரோ ரயில் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Cholinganallur ,Chipgad ,Metro Rail ,Chennai ,Metro ,Chipkot ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம்: 3...