×

அடுத்து வருவது பா.ஜ ஆட்சி தான் தெலங்கானா அரசின் ஊழல் டெல்லி வரை பரவி உள்ளது: பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு

வாரங்கல்: ‘தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் அரசு மிகவும் ஊழல்கள் நிறைந்தது. அவர்கள் ஊழல் டெல்லி வரை பரவி உள்ளது’ என பிரதமர் மோடி பேசி உள்ளார். தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாரங்கலின் காஜிப்பேட்டையில் ₹6,100 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அங்கு பாஜ பொதுக்கூட்ட பேரணியில் அவர் பேசியதாவது: முன்பெல்லாம் இரு நாடுகளுக்கு இடையே அல்லது இரு மாநிலங்களுக்கு இடையே வளர்ச்சிப் பணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, இரு மாநிலங்கள் இடையே தண்ணீருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என செய்திகள் வரும்.

ஆனால் முதல் முறையாக இரு மாநிலங்கள் இடையே ஊழலுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தனி மாநிலம் கோரி பல உயிர்களை தியாகம் செய்து போராட்டத்தை முன்னெடுத்த தெலங்கானா மக்கள் இப்படிப்பட்ட ஒப்பந்தத்தை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது துரதிஷ்டவசமானது. (டெல்லியில் புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்த குற்றச்சாட்டில் அம்மாநில துணை முதல்வர் சிசோடியா கைதாகி உள்ளார். அதே வழக்கில் தெலங்கானா முதல்வரும் பிஆர்எஸ் கட்சி தலைவருமான சந்திரசேகரராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை விசாரித்து வருவதை பிரதமர் மோடி இணைத்து பேசினார்). முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலங்கானா அரசு மிகவும் ஊழல்கள் நிறைந்தது.

இங்கு ஊழல் குற்றச்சாட்டு இல்லாத எந்த அரசுத் திட்டங்களும் இல்லை. இப்போது அவர்களின் ஊழல் கூடாரம் டெல்லி வரை பரவி உள்ளது. பிஆர்எஸ் கட்சி, மோடியையும், ஒன்றிய அரசையும் தொடர்ந்து திட்டி உள்ளது, ஒரு குடும்பத்தின் அதிகாரத்தை மையமாக்கி மாநிலத்தின் உரிமையாளராக தங்களை நிலைநிறுத்திக் கொண்டது, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்தது, மாநிலத்தை ஊழலில் மூழ்கடித்தது என 4 விஷயத்தை மட்டுமே இதுவரை செய்துள்ளது. குடும்ப ஆட்சி நடத்துபவர்கள் தங்களின் சந்ததிகளின் எதிர்காலத்தை பற்றி மட்டுமே கவலைப்படுவார்கள்.

தெலங்கானா குழந்தைகளின் எதிர்காலம் அழிக்கப்பட்டால், அதைப் பற்றி எந்த கவலையும் படமாட்டார்கள். இங்கு 12 பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை சீரழித்து லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பிஆர்எஸ் அரசு அழித்துள்ளது. சிலர் மக்களை தவறாக வழிநடத்த பொய்யான உத்தரவாதங்களை தருகின்றனர். பாஜ எப்போதும் பொய் உத்தரவாதங்களை தருவதில்லை. தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே அடுத்த தேர்தலில் பாஜவுக்கு வெற்றி தேடித்தந்து ஆட்சியில் அமர வைக்க விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

காங். என்றால் அர்த்தம் என்ன?
ராஜஸ்தானின் பிகானரில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ‘‘காங்கிரஸ் தனது 4 ஆண்டு ஆட்சியில் ராஜஸ்தானுக்கு நிறைய கேடு செய்துள்ளது. அசோக் கெலாட் அரசு ஊழல், குற்றம் மற்றும் சமாதனாப்படுத்தும் அரசியலின் புதிய அடையாளமாகி விட்டது. இங்கு பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பதிலும், காப்பாற்றுவதிலும் மாநில அரசு பிஸியாக உள்ளது. ஏற்கனவே கெலாட் அரசு வெளியேறும் கட்டத்திற்கு வந்து விட்டது. காங்கிரஸ் என்றால் ஒரே ஒரு அர்த்தம்தான். ‘கொள்ளையடிக்கும் கடை, பொய்களின் சந்தை’ என்றார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘வெறுப்பின் சந்தையில் அன்பின் கடைகளை திறப்போம்’ என செய்யும் பிரசாரத்திற்கு எதிராக பிரதமர் மோடி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post அடுத்து வருவது பா.ஜ ஆட்சி தான் தெலங்கானா அரசின் ஊழல் டெல்லி வரை பரவி உள்ளது: பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Telangana government ,Delhi ,Modi ,Warangal ,PRS government ,Telangana ,Dinakaran ,
× RELATED டெல்லி பாஜக அலுவலகத்தில் தீ விபத்து..!!