×

வீட்டின் முன் வைத்த பால் பாக்கெட்கள் மாயம் கர்ப்பிணி மனைவி பசி போக்க திருடியதாக வாலிபர் உருக்கம்: எச்சரித்து அனுப்பியது போலீஸ்

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி வீட்டின் முன்பு போடப்பட்ட பால் பாக்கெட் கிடைக்கவில்லை என்று வீட்டின் உரிமையாளர், பால் முகவர் கணேசன் (43) என்பவரிடம் புகார் செய்தார். உடனே முகப்பேர் பகுதியில் வீடுகளுக்கு பால் பாக்கெட் போடும் தமிழ் என்பவரிடம் விசாரித்தார். அவரும், பால் பாக்கெட் போட்டு விட்டதாக கூறினார். இதையடுத்து அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், தமிழ், 3 பால் பாக்கெட்களை போட்டு விட்டு செல்வதும், சிறிது நேரம் கழித்து அவ்வழியாக பைக்கில் வந்த ஒரு வாலிபர் பால் பாக்கெட்டை திருடிச்செல்வதும் பதிவாகி இருந்தது. அந்த பதிவுகளை வைத்து நொளம்பூர் போலீசில் பால் முகவர் கணேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

அதில், முகப்பேர் 6வது பிளாக்கை சேர்ந்த கவுதம் (23) என்பவர், பால் பாக்கெட் திருடியது தெரிந்தது. போலீசார் அவரை நேற்று முன்தினம் பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், அவர் போலீசில் கூறியதாவது: முகப்பேர் பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த மார்ச் மாதம் காதலித்த பெண்ணை திருமணம் செய்தேன். தற்போது, எனது மனைவி கர்ப்பமாக உள்ளார். ஏற்கனவே அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தேன். அங்கிருந்து வேலையை விட்டு நின்றவுடன் தனியார் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தேன். வாரம்தோறும் கிடைக்கும் சம்பளத்தை வைத்து என்னால் குடும்பம் நடத்த முடியவில்லை. வறுமை காரணமாக கடந்த 28ம் தேதி பால் வாங்க பணம் இல்லாததால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தேன். அப்போது, ஒரு வீட்டின் முன்பு வாலிபர், பால் பாக்கெட்டுகள் போடுவதை பார்த்தேன். அந்த பால் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றேன். வறுமையின் காரணமாக திருடுவது தவறு என்பது அந்த நேரத்தில் எனக்கு தெரியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் என கண்ணீர்மல்க தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது பழைய வழக்குகள் எதுவும் இல்லை என்பதை போலீசார் விசாரித்து தெரிந்துகொண்டனர். பிறகு கவுதமுக்கு அறிவுரை கூறியதுடன் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

The post வீட்டின் முன் வைத்த பால் பாக்கெட்கள் மாயம் கர்ப்பிணி மனைவி பசி போக்க திருடியதாக வாலிபர் உருக்கம்: எச்சரித்து அனுப்பியது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Mukappher ,Chennai ,
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக...