×

ஆரல்வாய்மொழி அருகே சூறைக்காற்றில் சாய்ந்த பேரிகார்டுகளால் விபத்து அபாயம்

ஆரல்வாய்மொழி, ஜூலை 8: காவல்கிணறு – நாகர்கோவில் 4 வழி சாலையில் இருந்து பிரியும் இணைப்பு சாலை பகுதிகள் மற்றும் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் சில நேரங்களில் இந்த பேரிகார்டுகளில் வாகனங்கள் அதிவேகமாக வந்து மோதி விபத்துள்ளாகி வருகின்றன.
தற்போது ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்திற்கு அதிகமாக சூறைக்காற்று வீசி வருவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுவதும், சாலையில் வைக்கப்படும் பேரிகார்டுகள் காற்றின் அதி வேகத்தால் கீழே சரிந்து விழுவதுமாக உள்ளன.

இந்நிலையில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் பேரிகார்டுகள் கீழே விழுந்து விபத்து ஏற்படாதவாறு இருப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேரிகார்டுகளின் அடிப்பகுதியில் கற்கள் மற்றும் கனமான பொருட்களை வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே ஆரல்வாய்மொழி அருகே மங்கம்மா சாலையில் இருந்து 4 வழி சாலையை கடந்து தேவசகாயம் மவுண்ட் செல்லும் பகுதியில் 4 வழி சாலையின் இரு பகுதிகளிலும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காவல் கிணற்றில் இருந்து நாகர்கோவில் செல்லும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றின் வேகத்தால் கீழே விழுந்தன. இதில் கனரக வாகனங்கள் பேரிகார்டுகளில் மோதி சென்றதால் சேதமடைந்தன. இவை அதே பகுதியில் சாலையின் இரு பகுதிகளிலும் விபத்து ஏற்படும் விதத்தில் கிடக்கின்றன.

இரவு நேரங்களில் அப்பகுதியில் அதிக மின் வெளிச்சம் இல்லாத காரணங்களினால், 4 வழி சாலையில் அதிவேகமாக வரும் கார் மற்றும் இருச்சக்கர வாகனங்கள் பேரிகார்டுகள் கிடப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. எனவே சேதமடைந்து விபத்து ஏற்படும் விதத்தில் உள்ள பேரிகார்டுகளை அகற்றி, தரமான பேரிகார்டுகள் அமைக்க வேண்டும். மேலும் காற்றின் வேகம் இப்பகுதியில் அதிகமாக உள்ளதால் பேரிகார்டுகள் கீழே விழாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post ஆரல்வாய்மொழி அருகே சூறைக்காற்றில் சாய்ந்த பேரிகார்டுகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Aralwaimozhi ,Aralvaimozhi ,Kavalkinaru ,Nagercoil ,Dinakaran ,
× RELATED தோவாளை அருகே நான்குவழிச்சாலையில்...