*அம்பை அருகே பரிதாபம்
அம்பை : அம்பை அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் புது மாப்பிள்ளை, குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அக்கசாலை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் இசக்கி ராஜ் (30), ஏசி மெக்கானிக். இவர், தனது தாயார் அலங்காரி என்ற சரஸ்வதி (50), சகோதரி இசக்கியம்மாள் என்ற கார்த்திகா (25). கார்த்திகாவின் 2 வயது குழந்தை சந்துரு ஆகியோருடன் ஒரே பைக்கில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் நடைபெறும் உறவினரின் இல்ல காதுகுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
நெல்லை – பாபநாசம் மெயின்ரோட்டில் விகேபுரத்திலிருந்து அம்பை நோக்கி டிப்பர் லாரிக்கு டீசல் போடுவதற்காக அசோகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். சரியாக கோடாரங்
குளம் விலக்கு அருகில் டிப்பர் லாரி சென்ற போது திடீரென ஸ்டியரிங் கட் ஆனதாக கூறப்படுகிறது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி இசக்கி ராஜ் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இசக்கிராஜின் தாயார் சரஸ்வதி மற்றும் சகோதரி, அவரது இரண்டு வயது குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அடிபட்டு கிடந்த இசக்கி ராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இசக்கி ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பை டிஎஸ்பி சதீஸ்குமார், இன்ஸ்பெக்டர்கள் அம்பை மகேஷ்குமார், விகேபுரம் சுஜித் ஆனந்த் ஆகியோர் பலியானவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியை ஓட்டி வந்த விகேபுரம் அருகே பசுக்கடைவிளை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த மயில் மகன் அசோக் ராஜ் (33) என்பவரை கைது செய்தனர். விபத்தில் பலியான இசக்கிராஜிற்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக அவர்களது குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்தனர். இந்நிலையில் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த புது மாப்பிள்ளை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பைக் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post பைக் மீது டிப்பர் லாரி மோதி பயங்கரம் புது மாப்பிள்ளை, குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி appeared first on Dinakaran.
