×

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ₹2.22 கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு

நாகர்கோவில், ஜூலை 7: ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ₹2 கோடி 22 லட்சம் மதிப்பில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தர் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேலசங்கரன்குழி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேலசங்கரன்குழி ஊராட்சிக்குட்பட்ட ஆலடிகுளம் குளத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II திட்டத்தின்கீழ் ₹6.90 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கன்னிமார் குளம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ₹13.62 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பணி, பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ₹2.40 லட்சம் மதிப்பில் மேலசங்கரன்குழி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நடக்கும் பணி, விராலிவிளையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II திட்டத்தின்கீழ் ₹13.94 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் விவசாய உற்பத்தி சேமிப்பு கிடங்கு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் சாந்தபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ₹6.49 லட்சம் மதிப்பில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இந்திரா நகர் முதல் ஆதிதிராவிடர் காலனி வரை ₹8.5 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ₹27 லட்சம் மதிப்பில் களியங்காடு அரசு தொடக்கப்பள்ளியில் 3 புதிய வகுப்பறைகள் கட்டும் பணி, கோட்டார் கவிமணி தேசிக விநாயகம் அரசு தொடக்கப்பள்ளியில் ₹72 லட்சம் மதிப்பில் 5 புதிய வகுப்பறைகள் கட்டும் பணி, ₹71.25 லட்சம் மதிப்பில் புதிதாக 4 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, செயற்பொறியாளர் ஹசன் இப்ராகிம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகபாய், புனிதம், ராஜா, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஐயப்பன், மேலசங்கரன்குழி ஊராட்சி முத்துசரவணன், மாநகர் மன்ற உறுப்பினர் செல்வகுமார் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ₹2.22 கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Rajakamangalam panchayat ,Nagercoil ,Rajakamangalam ,Dinakaran ,
× RELATED சரலூர் ஆற்றங்கரை சாலையில் மழைநீர் வடிகால் இணைக்கப்படுமா?